×
Saravana Stores

நெல்லையப்பர் கோயிலின் சந்திர புஷ்கரணி முறையான பராமரிப்பின்றி தூர்ந்துபோன வெளி தெப்பக்குளம்

*விரைவில் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

நெல்லை : நெல்லையப்பர் கோயிலின் சந்திர புஷ்கரணி என பக்தர்களால் அழைக்கப்படும் வெளி தெப்பக்குளமானது முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போனதால், விரைவில் சீரமைத்து முறையாக பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்துள்ளது. வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி பாய்ந்தோடும் நெல்லை மாநகரின் மத்தியில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி நகருக்கு திக்கெட்டும் புகழ் சேர்க்கும் பாரம்பரியமிக்க இக்கோயிலுக்கு வெளித்தெப்பம், கருமாரி தெப்பம், பொற்றாமரை குளம், ஆர்ச் பகுதியில் தாமரை குளம் என மொத்தம் 4 தெப்பக்குளங்கள் ஒரு காலத்தில் இருந்தன. இந்த தெப்பக்குளங்களுக்கு நெல்லை கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு நயினார் குளத்தில் நிரம்பிய பின் அனைத்து தெப்பக்குளங்களும் ஒரு காலத்தில் நிரம்பி வழிந்தன.

இதனிடையே அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் அப்பர் தெப்ப உற்சவம் நடைபெறும். இந்நிலையில் பொற்றாமரை குளம் மட்டும் பராமரித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வசந்த மண்டபம் அருகே அமைந்துள்ள கருமாரி தெப்பம் பராமரிப்பு இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது கருமாரி தெப்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக சீரமைப்பு பணி துவங்கி நடந்து வருகிறது.

ஆனால், இன்னும் முடிந்த பாடில்லை. எனவே கருமாரி தெப்பகுளத்தின் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். இதனிடையே நெல்லையப்பர் கோயிலின் சந்திர புஷ்கரணி என பக்தர்களால் அழைக்கப்படும் வெளி தெப்பக்குளமானது முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் உ்ள்ளது. இதனால் வேதனைப்படும் பக்தர்கள், இதை விரைவில் சீரமைத்து முறையாக பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிறப்புமிக்க இந்த வெளிதெப்பகுளத்தில் தான் தைப்பூச திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறுக்குத்துறை கோயிலில் இருந்தும் வெளி தெப்பத்தில் சித்திரை திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடத்தப்படும். வெளி தெப்பத்தில் உள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தை பருகினால் நோய்கள் பல நீங்கும் என்பது பக்தர்கள் ஐதீகம் உள்ளது. ஆனால் தற்போது தெப்பக்குளம் இருக்கும் நிலையை கண்டாலே பல நோய்கள் நம்மை வாட்டி வதைக்கும் நிலை ஏற்படும். வெளி தெப்பக்குளத்தை பராமரித்து பாதுகாக்க தவறிய அறநிலையத்துறையால் தற்போது குப்பைகள், கழிவுகள் நிரம்பி வழிகிறது.

மேலும் தெப்பகுளத்தில் மேற்கு பகுதியில் உள்ள படித்துறைகள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகின்றன. இதேபோல் வடக்குப் புறத்தில் காணப்படும் தெப்பகுளத்தின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் முழுவதும் சரிந்து விழுந்து பாதுகாப்பு இன்றி காணப்படுகிறது. மேற்கு பகுதி படித்துறை பகுதியில் ஏராளமான மதுபாட்டில்கள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. புனித தன்மை உடைய சந்திர புஷ்கரணி தெப்ப குளத்தில் முதியவர் ஒருவர் விழுந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குளத்தை முறையாக தூர்வாரி, சேதமடைந்த வடக்கு பகுதி பாதுகாப்பு சுற்றுச்சுவரை சீரமைத்து, கம்பி வலைகள் அடித்து பாதுகாக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெளி தெப்பக்குளம் சமூக விரோதிகள் புகலிடமாக மாறுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். நெல்லை டவுன் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார் வெளிதெப்பக்குளத்தை சுற்றிலும் நடைபெறும் சமூக விரோத செயல்களை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

The post நெல்லையப்பர் கோயிலின் சந்திர புஷ்கரணி முறையான பராமரிப்பின்றி தூர்ந்துபோன வெளி தெப்பக்குளம் appeared first on Dinakaran.

Tags : Chandra Pushkarani ,Nellayapar Temple ,Nella ,Theppakulam ,Nellaiappar ,Nellaiyapar Temple ,Dinakaran ,
× RELATED திருக்குறுங்குடியில் யானை...