கோத்ரா: குஜராத் தேர்வு மையத்தில் நீட் தேர்வில் நடந்த நூதன மோசடி தொடர்பாக பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் மீது போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தேர்வு மையத்தில், பள்ளி ஆசிரியரான துஷார் பட், துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரை அணுகிய பரசுராம் ராய், ஆரிப் வோரா என்கிற 2 பேர் நூதன மோசடி செய்ய பேரம் பேசி உள்ளனர். அதன்படி நீட் தேர்வு எழுதும் 16 மாணவர்களின் பெயரை ஆசிரியரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ராய் அனுப்பி உள்ளார். மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்த விடைகளை எழுதி, தெரியாதவற்றை விட்டு விடுவார்கள். தேர்வு முடிந்ததும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை வைத்து விடுபட்ட கேள்விகளை நிரப்பிக் கொள்ளலாம் என அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, தலா ஒரு மாணவருக்கு ரூ10 லட்சம் தருவதாக துஷார் பட்டிடம் கூறப்பட்டுள்ளது. 6 மாணவர்கள் பணம் தர ஒப்புக் கொண்டதாகவும் ஒரு மாணவர் தந்த ரூ7 லட்சம் முன்பணம் துஷார் பட்டுக்கு தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை குழுவினர் விரைந்து வந்த விசாரித்ததில் ஆசிரியர் துஷார் பட் சிக்கினார். அவரது காரிலிருந்து ரூ7 லட்சம் பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் உட்பட 3 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.