- கோஹ்லி
- பட்டிதர்
- பெங்களூர்
- பஞ்சாப்
- தரம்சாலா
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
- பஞ்சாப் கிங்ஸ்
- ஐபிஎல் லீக்
- ஹிமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம்
- தின மலர்
தரம்சாலா: ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கோஹ்லி, பட்டிதாரின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு் அணி 60 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். கவெரப்பா வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் கோஹ்லி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அசுதோஷ் கோட்டைவிட… கோஹ்லி டக் அவுட்டாவதில் இருந்து தப்பிப் பிழைத்தார். டு பிளெஸ்ஸி 9 ரன், வில் ஜாக்ஸ் 12 ரன் எடுத்து கவெரப்பா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆர்சிபி 43 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.
கோஹ்லி மற்றும் ரஜத் பட்டிதார் கொடுத்த பல கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் வீரர்கள் வீணடிக்க, அதைப் பயன்படுத்திக் கொண்ட இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். சிக்சர் மழை பொழிந்த பட்டிதார் 21 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி கரன் வேகத்தில் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். 32 ரன்னில் அரைசதம் அடித்த கோஹ்லி, அடுத்து மின்னல் வேகத்தில் ரன் சேர்க்க ஆர்சிபி 200 ரன்களை கடந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 47 பந்தில் 92 ரன் (6 சிக்சர், 7 பவுண்டரி) விளாசி அர்ஷ்தீப் வேகத்தில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 27 பந்தில் 46 ரன்னும், தினேஷ் கார்த்திக் 7 பந்தில் 18 ரன்னும் அடித்து ஆட்டமிழக்க ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவரில் 181 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. அதிகபட்சமாக ரோசோவ் 61 ரன் (27 பந்து) விளாசினார். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி 12 போட்டிகளில் 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று ப்ளே ஆப் வாய்ப்பை நூலிழையில் தக்க வைத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டியில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளுடன் ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.
The post கோஹ்லி – பட்டிதார் அதிரடி; ஆர்சிபி அபார வெற்றி: வெளியேறியது பஞ்சாப் appeared first on Dinakaran.