×

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மையம்: 12 டாக்டர்களுடன் அடுத்த மாதம் திறப்பு

சென்னை: சென்னையிலிருந்து தென்தமிழகம் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு பொதுவாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் குறிப்பாக, மகேந்திரா சிட்டி மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் இடையிலான 4 கி.மீ. தூரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் சாலைகளில் விபத்தில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்காததும் இறப்புகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிர் இழப்பை குறைப்பதற்காக ஒன்றிய அரசு அவசர சிகிச்சை பிரிவு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற உயிர் இழப்பை குறைப்பதற்காக முதன் முறையாக சென்னை – திருச்சி ேதசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோயிலில் விபத்து கால அவசர சிகிச்சை பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் போதிய ஊழியர்கள் இல்லாததால் சிகிச்சை மையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த மையத்தில் பணியாற்றுவதற்காக தமிழக அரசு பணியாளர்களை நியமித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபொருமாள் கோயிலில் அவசர சிகிச்சை மையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கபெருமாள் கோயிலில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர சிகிச்சை மையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இதன் முக்கிய நோக்கம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதுதான். அதன்பின் அருகில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்காக 12 மருத்துவர்கள் 3 ஷிப்டு அடிப்படையில் இங்கு பணியாற்ற உள்ளனர். இந்த மருத்துவர்கள் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாப்பது உள்ளிட்ட அடிப்படை சிகிச்சைகளை அளிப்பார்கள். இதனால் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் கூடுதலாக கிடைக்கும் என்றனர்.

The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மையம்: 12 டாக்டர்களுடன் அடுத்த மாதம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai-Trichy National Highway ,Chennai ,Chennai – Trichy National Highway ,Southeast ,Mahendra City ,Sinhaperumal Temple ,
× RELATED சாலை தடுப்பு சுவரில் எரிவாயு டேங்கர்...