×

தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல்; பாஜ பிரமுகருக்கு சரமாரி வெட்டு: மாவட்ட தலைவர், செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு


திருவாரூர்: தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் ஏற்பட்ட மோதலில் பாஜ பிரமுகருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட தலைவர், செயலாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் மது (எ) மதுசூதனன் (40). காவனூர் அருகே அடவங்குடி என்ற இடத்தில் மெடிக்கல் ஷாப் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். பாஜ விவசாய அணி மாவட்ட பொது செயலாளராக பதவி வகித்து வந்த இவருக்கும், திருவாரூர் மாவட்ட தலைவராக இருந்து வரும் பாஸ்கர் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடத்திற்கு முன்னர் மதுசூதனன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இவர், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தத்திற்கு மிகவும் நெருங்கியவர்.

அவரது தீவிர ஆதரவாளர். இவர்தான், கருப்பு முருகானந்தம் மற்றும் நாகப்பட்டினம் தொகுதி பாஜ வேட்பாளரின் பண விநியோகத்தை கவனித்து வந்தாராம். கேட்ட நிர்வாகிகளிடம் இவர் பணத்தைக் கொடுக்காமல், முறைப்படி பணத்தை செலவு செய்துள்ளார். இதனால் கட்சியில் உள்ள சில நிர்வாகிகள் அவர் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடவாசல் ஓகை பாலம் அருகே இருந்து வரும் கடை ஒன்றில் மதுசூதனன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் மதுசூதனனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த மதுசூதனன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தை பார்த்த அக்கம், பக்கத்தினர் மதுசூதனனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவரது மனைவி ஹரிணி, குடவாசல் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது கணவர் மதுசூதனனின் அரசியல் வளர்ச்சி பிடிக்காததன் காரணமாக மாவட்ட தலைவர் பாஸ்கரின் நெருக்கடி காரணமாக தான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னரும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், தற்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர் செந்திலரசன் ஆகியோர் தான் முழு பொறுப்பு. பாஸ்கர் உத்தரவின் பேரிலும், செந்திலரசன் தூண்டுதலின் பேரிலும் தான் இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார், பாஸ்கர், செந்திலரசன் மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி, கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலின் போது பூத் கமிட்டிக்காக கட்சி மேலிடம் மூலம் வழங்கப்பட்ட தொகையில் பெரும் தொகையை பாஸ்கர் சுருட்டி கொண்டதாக தற்போது சமூக வலைதளங்களில் மதுசூதனன் பரப்பியதற்கு பின்னர் தான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. தலைமறைவான 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்பது பின்னர் தெரிய வரும்’ என்றனர்.

The post தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல்; பாஜ பிரமுகருக்கு சரமாரி வெட்டு: மாவட்ட தலைவர், செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tiruvarur ,Madhu ,Kavanur ,Gudavasal taluka ,Dinakaran ,
× RELATED பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி...