×

9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு: உடனடியாக செல்போனில் எஸ்எம்எஸ்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிந்தது. பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12,616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 பேர் ஆண்கள். 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பேர் பெண்கள். மாற்றுப் பாலினத்தவர் 1. இதுதவிர தனித் தேர்வர்களாக 28, 827 பேரும் பங்கேற்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 118 இடங்களில் விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து 88 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏப்ரல் 10ம் தேதி இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதில் 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த வாரம் திருத்தும் பணிகள் முடிந்து தேர்வுத்துறைக்கு மதிப்பெண் விவரங்கள் வந்து சேர்ந்தன. தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. இதை தொடர்ந்து ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மே 10ம் தேதி (இன்று) தேர்வு முடிவை வெளியிட தயாராக உள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வுத்துறை இயக்கக அலுவலகத்தில் இயக்குநர் சேதுராமவர்மா தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். அதேநேரத்தில், தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வுத்துறைக்கு தெரிவித்த செல்போன் எண்களுக்கு உடனடியாக மதிப்பெண்களுடன் தேர்வு முடிவு எஸ்எம்எஸ் மூலம் சென்று சேரும். அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணைய தளங்களான www.results.nic.in, www.dge.tn.gov.in, http://results.digilocker.gov.in/ ஆகிய இணைய தளங்களிலும் ேதர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொது நூலங்களிலும் தேர்வு முடிவை பார்வையிடலாம்.

The post 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு: உடனடியாக செல்போனில் எஸ்எம்எஸ் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,Tamilnadu, Puducherry ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்