சென்னை: விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனரான சிவா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்து விடுவதால் விலங்குகள், மனித மோதல்கள் ஏற்படுகிறது. அனைத்து ஜீவராசிகளை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. வன விலங்குகளுக்காக குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் மையங்களை ஏற்படுத்தவும், தெரு விலங்குகளுக்கு தண்ணீர், உணவு கிடைப்பதை உறுதி செய்யக் கோரியும் அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து கோடைகாலத்தில் தெரு விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, தெரு விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்க என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரம் தள்ளிவைத்தது.
The post கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்குவது குறித்த திட்டங்கள் என்ன? அரசு தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.