சண்டிகர்: அரியானாவில் பாஜ அரசுக்கு சிக்கல் இல்லை என்று அம்மாநில முதல்வர் கூறினார். அரியானாவில் முதல்வர் நயாப்சிங் சைனி தலைமையிலான பாஜ அரசு நடந்து வருகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். பாஜவுக்கு 40 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 30 எம்எல்ஏக்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் மற்றும் லோக்தளம் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பாஜவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி வாபஸ் பெற்றது. இதையடுத்து, 6 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜ ஆட்சி நீடித்து வருகிறது. மனோகர்லால் கட்டாருக்கு பதிலாக, நயாப்சிங் சைனி முதல்வராக பதவி ஏற்றார். இதற்கிடையே, சுயேச்சை எம்எல்ஏக்கள் சோம்பிர் சங்வான், ரந்திர் சிங் கோலன், தரம்பால் கோண்டர் ஆகியோர் பாஜ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்தனர். இதனால், அரியானா பாஜ அரசுக்கு அறுதிப்பெரும்பான்மைக்கு 2 எம்எல்ஏக்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘3 சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். அதனால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. எனவே, மாநில அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்குமாறு அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுத உள்ளது. பிறகு புதிதாக சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும். இதுபோல், ஜனநாயக ஜனதா, லோக்தளம், சுயேச்சை எம்எல்ஏ பல்ராஜ் குண்டு ஆகியோரும் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு கவர்னருக்கு கடிதம் எழுத வேண்டும்’ என்றார்.
இந்நிலையில், ‘தனது அரசுக்கு சிக்கல் இல்லை’ என்று நயாப்சிங் சைனி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக சிர்சாவுக்கு சென்ற அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மாநில அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. வலிமையாக இயங்குகிறது. அரசுக்கு சிக்கல் இருப்பதுபோல் காங்கிரஸ் குழப்பத்தை உண்டாக்கி வருகிறது’ என்றார். நயாப்சிங் சைனி கடந்த மார்ச் 13ம் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவர் தயாராக இருப்பதாக மாநில பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.
The post அரியானாவில் பாஜ ஆட்சிக்கு சிக்கலா?: முதல்வர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.