×
Saravana Stores

எதுக்கும் ஜெயிச்சு வைப்போம்! வரிந்துகட்டும் பெங்களூரு – பஞ்சாப்

தரம்சாலா: ஐபிஎல் டி20 தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 11 லீக் ஆட்டங்களில் விளையாடி தலா 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு 7வது இடத்திலும், பஞ்சாப் 8வது இடத்திலும் உள்ளன. ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறிய இந்த 2 அணிகளின் சமீபத்திய வெற்றிகளால், பிளே ஆப் வாய்ப்பு நூலிழையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. எனினும், எஞ்சியுள்ள ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளன. ஷிகர் தவான் காயத்தில் இருந்து மீளாததால் சாம் கரன் தலைமையில் பஞ்சாப் விளையாடி வருகிறது. ஏற்கனவே தவான் தலைமையில் விளையாடிய லீக் ஆட்டத்தில் ஆர்சிபி தான் வென்றது.

இம்முறை அதற்கு பதிலடி தர பஞ்சாப் தரப்பு வரிந்துகட்டுகிறது. ரன் குவிப்பில் முதலிடத்துக்கான ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கும் கோஹ்லி (11 போட்டியில் 552 ரன்), கேப்டன் டு பிளெஸ்ஸி, தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். சிராஜ், யஷ், கிரீன், வைஷாக் பந்துவீச்சும் அந்த அணிக்கு பலம் சேர்க்கிறது. அதே சமயம் பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன், ரூஸோ, ஷஷாங்க், சாம் அதிரடி காட்டினால் பஞ்சாப்பை கட்டுப்படுத்துவது கடினம். ரபாடா, ஹர்பிரீத், ராகுல் சாஹர் பந்துவீச்சை சமாளிப்பதும் ஆர்சிபி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவே இருக்கும். இரு அணிகளுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை பற்றி கவலைப்படாமல் ஹாட்ரிக் வெற்றிக்கு குறி வைப்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

* இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளதில் பஞ்சாப் 17-15 என முன்னிலை வகிக்கிறது.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஆர்சிபி 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* நடப்புத் தொடரில் மார்ச் 25ல் நடந்த 6வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு 4விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
* அதிகபட்சமாக பஞ்சாப் 232, பெங்களூரு 226 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 88, பெங்களூரு 84 ரன்னில் சுருண்டுள்ளன.

The post எதுக்கும் ஜெயிச்சு வைப்போம்! வரிந்துகட்டும் பெங்களூரு – பஞ்சாப் appeared first on Dinakaran.

Tags : Varindukattum ,Bengaluru ,Punjab ,Dharamsala ,IPL T20 ,Punjab Kings ,Royal Challengers ,Bangalore ,Varinthukattum ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை;...