* கொருக்குப்பேட்டையில் பரபரப்பு
* அதிகாரிகள் சமரசம்
சென்னை: சிக்னல் கோளாறால் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. எனவே, தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி ஒரு மின்சார ரயில் நேற்று காலை பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது சிக்னல் கோளாறு காரணமாக ரயில் பாதிவழியில் நிறுத்தப்பட்டது. வெகுநேரமாகியும் சிக்னல் சரியாகாததால் ரயிலில் வந்த பயணிகள் 200க்கும் மேற்பட்டோர் ரயிலை விட்டு இறங்கி தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், மின்சார ரயில், சரக்கு ரயில் அனைத்தும் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. எனவே, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ரயில்வே போலீசார் மற்றும் கொருக்குப்பேட்டை, ஆர்.கே. நகர் சட்டம்- ஒழுங்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட ரயில் பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனால் அலுவலகத்திற்கு நாங்கள் சரியான நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதிகாரிகள் இதற்கு சரியான பதில் கூற வேண்டும் என்று பயணிகள் கூறினர். இதை தொடர்ந்து, கொருக்குப்பேட்டை ரயில்நிலைய அதிகாரி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து, சிக்னல் பிரச்னை இனி ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று எழுதிக் கொடுத்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையம், வியாசர்பாடி ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு ரயில்கள் பிரிந்து செல்லக்கூடிய முனையமாக உள்ளது. இதனால் சிக்னல் கோளாறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என அதிகாரிகள் ஆய்வு செய்து, இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
The post சிக்னல் கோளாறால் மின்சார ரயில் நிறுத்தம்; தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.