×

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு; தீவிரமாகும் விசாரணை

நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மே 4ம் தேதி ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் தோட்டத்தில் கண்டெடுத்தது தொடர்பாக டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது. டிஎன்ஏ அறிக்கை வந்தவுடன் மகன் மற்றும் மனைவியின் டிஎன்ஏக்களை ஒப்பிட்டு உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மாயமானதாக அவரது மகன் ஜெஃப்ரின் புகார் அளித்திருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மர்ம மரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமார் தனது மரண வாக்குமூலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு, காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரது பெயர்களை குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் தனக்கு பணம் தர வேண்டும் என்பது குறித்த பட்டியலையும் தனது மருமகனுக்கு எழுதியிருந்தார். இப்படி அடுத்தடுத்து கடிதங்கள் வெளியான நிலையில், தங்கபாலு உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில், நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்ட கூலிப்படையினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமாரின் எலும்புகள் டி என் ஏ பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஎன்ஏ அறிக்கை வந்தவுடன் மகன் மற்றும் மனைவியின் டிஎன்ஏக்களை ஒப்பிட்டு உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு; தீவிரமாகும் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nella ,Congress ,Executive ,Jayakumar Danasinghe ,Jayakumar Danasing ,Madurai Zone Trace Science Laboratory ,Jayakumar ,Dinakaran ,
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...