×

சித்தூரில் இடி, மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

*போர்க்கால அடிப்படையில் அகற்ற ஆணையர் உத்தரவு

சித்தூர் :சித்தூரில் இடி, மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனை போர்க்கால அடிப்படையில் அகற்ற மாநகராட்சி ஆணையர் அருணா உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் 110 முதல் 114 டிகிரி வரை வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காலையில் வெயில் சுட்டெரித்தாலும், மாலையில் சித்தூர், திருப்பதி மாவட்டத்தில் வானிலை திடீரென மாறி கோடை மழை பெய்து வருகிறது. இதேபோன்று சித்தூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதனால் சித்தூர் மாநகரத்தில் முக்கிய சாலைகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில பகுதிகளில் மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் அருணா நேற்று காலை சித்தூர் மாநகரம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டர். சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், கிளைகளை அகற்றி விரைந்து சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி பொறியியல் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

கொங்காரெட்டிப்பள்ளி, கட்டமஞ்சி, வன்னியர் பிளாக், திம்மாரெட்டி சர்க்கிள், காந்தி சர்க்கிள், சாமந்திபுரம், விவேகானந்தா சர்க்கிள் இருவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற ஆணையர், மரங்கள், கிளைகளை அகற்றும் பணியை ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், செடிகளை அகற்றி, துப்புரவு பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மின்கம்பங்கள் தொடர்பாக மின்சார வாரிய துறை அதிகாரிகளிடம் பேசினர். மாநகராட்சியில் பொறியியல் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகளின் அதிகாரத்தின் கீழ் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி அனில் குமார் நாயக் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பல பகுதிகளில் நிலைமையை கண்காணித்து பணிகளை விரைவாக செய்தனர்.

பெரிய மரங்களின் கிளைகளை விரைவாக அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி அலுவலர்கள், வார்டு துப்புரவு மற்றும் சுற்றுச்சூழல் செயலாளர்கள், வசதித்துறை செயலாளர்கள், கொத்தனார், நகர துப்புரவு மற்றும் பொறியாளர் பணியாளர்கள் விரைந்து பணிகளை மேற்கொண்டு, மாநகரில் பல இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள், கிளைகளை போர்க்கால அடிப்படையில் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அகற்றினர்.

The post சித்தூரில் இடி, மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள் appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Municipal Commissioner ,Aruna ,AP ,Dinakaran ,
× RELATED சித்தூர் ரயில், பேருந்து நிலையங்களில் துப்புரவு பணிகளை ஆணையர் ஆய்வு