×
Saravana Stores

ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க வனவிலங்குகளுக்கு தர்பூசணி, வெள்ளரி, சத்து டானிக் வழங்கல்

* குளிர்ச்சியான சூழல் உருவாக்கம்

* வனத்துறை நடவடிக்கை

புதுச்சேரி, மே 8: புதுச்சேரி வனத்துறையில், ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் தர்பூசணி, வெள்ளரி, சத்து டானிக் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி முதலியார்பேட்டை ஏஎப்டி மைதானம் அருகே வனத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகள் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. வழித்தவறி வரும் வனவிலங்குகள், காயமடையும் விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

இங்கு பாம்பு, மயில், முள்ளம்பன்றி, கிளிகள், பருந்துகள், ஆமைகள் ஆகியவற்றை மீட்டு பரமாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான ஆடு, மாடுகளும் இந்த வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர். மனிதர்களை போலவே விலங்குகளும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் வன விலங்குகளின் பாதுகாப்பிலும் ஊழியர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். வெயிலால் வனவிலங்குகள் பாதிக்கப்படாத வகையில், நாள்தோறும் வனத்துறை ஊழியர்கள் மலைப்பாம்பு உள்ளிட்ட இதர உயிரினங்கள் பராமரிக்கப்படும் இடங்களை சுற்றிலும் தண்ணீரை ஊற்றி குளிர்ச்சியூட்டுகின்றனர்.

வெயிலுக்கு இதமாக வனத்துறையில் உள்ள ஆண், பெண் என 27 மான்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்ச்சியாக்கினர். மேலும் மான்களுக்கு பசுந்தீவனங்களுடன் வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றையும் வழங்கினர். இதனை மான்கள் உள்ளிட்ட விலங்குகள் ஆர்வமுடன் சாப்பிட்டது. இது குறித்து கால்நடை மருத்துவர் குமரன் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரி வனத்துறை மீட்பு மையத்தில் உள்ள விலங்குகளுக்கு நீர் சத்து நிரம்பிய வெள்ளரி, தர்பூசணி, தாதூஉப்புகள், லிவர் டானிக், கால்சியம் டானிக் ஆகியவற்றை உணவில் கலந்து கொடுத்து வருகிறோம்.

விலங்குகளை சுற்றியுள்ள சூழல் குளிர்ச்சியாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதன் மூலம் உணவு உண்ணும் திறனும் அதிகரிக்கும். அகத்திக்கீரை மற்றும் பழவகைகள் ரெகுலராக கொடுத்து வருகிறோம். சில மான்கள் கருவுற்று இருப்பதால், அதற்கேற்ப சத்து டானிக் பரிந்துரை செய்யப்படுகிறது. பாம்புகள் பராமரிக்கப்படும் இடத்தில் தண்ணீர் தொட்டியினை வைத்திருப்பதால், பாம்புகள் தன்னைத்தானே குளிர்வித்துக்கொள்ளும், என்றார்.

The post ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க வனவிலங்குகளுக்கு தர்பூசணி, வெள்ளரி, சத்து டானிக் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Forest Department ,AFT Ground Forest ,Dinakaran ,
× RELATED தீபாவளியை ஒட்டி கட்டட...