×
Saravana Stores

ராயல்சை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்

புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வென்றது. அருண் ஜெட்லி அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீசியது. மெக்கர்க் – போரெல் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரில் மெக்கர்க் காயம் அடைந்தாலும், உறுதியுடன் தொடர்ந்து விளையாடிய அவர் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ராயல்ஸ் பந்துவீச்சை பதம் பார்த்தார். மெக்கர்க் 19 பந்தில் அரை சதம் விளாசி மிரட்ட, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவரில் 60 ரன் சேர்த்தது. ஆவேஷ் கான் வீசிய 4வது ஓவரில் மெக்கர்க் 28 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது
மெக்கர்க் 50 ரன் (20 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹோப் 1, அக்சர் 15 ரன் எடுத்து வெளியேறினர். எனினும், போரெல் – கேப்டன் பன்ட் அதிரடியில் இறங்க, டெல்லி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. போரெல் 65 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), பன்ட் 15 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஸ்டப்ஸ், நயிப் அதிரடியில் இறங்க டெல்லி 200 ரன்னை கடந்தது. நயிப் 19 ரன், ஸ்டப்ஸ் 41 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ரஷிக் சலாம் 9 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது. குல்தீப் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் அஷ்வின் 3, போல்ட், சந்தீப், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து, 20 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

சாம்சன் அதிகபட்சமாக 86 ரன் (46 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். ரியான் 27 ரன், டூபே 25 ரன் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் கலீல், குல்தீப், முகேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டெல்லி 12 போட்டியில் 6வது வெற்றியை வசப்படுத்தி 12 புள்ளிகளுடன் 5 வது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 11 போட்டியில் 3வது தோல்வியை பதிவு செய்தாலும், தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது (16 புள்ளி).

The post ராயல்சை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் appeared first on Dinakaran.

Tags : Delhi Capitals ,Royals ,New Delhi ,IPL league ,Rajasthan Royals ,Arun Jaitley Arena ,McCurg ,Borel ,Dinakaran ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...