×

இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

பெங்களூரு: இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் கடந்த 4-ம் தேதி கர்நாடக பாஜக வின் எக்ஸ் தளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக கர்நாடக மாநில பாஜக சமுக ஊடகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கு இன்றைய தினம் வாக்குப்பதிவு நடந்தது. இதனிடையே கடந்த 4-ம் தேதி கர்நாடக மாநில பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், இடஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கே ஆதரவாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் பா.ஜ.க. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது. கலவரத்தைத் தூண்டி பகையை வளர்க்க பாஜக விரும்புவதாக தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு கர்நாடக பாஜக-விற்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார். ஆனால் அந்த பதிவு நீக்கப்படாததால், கர்நாடக பா.ஜ.க.வின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு ‘எக்ஸ்’ தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Karnataka BJP ,Bangalore ,Congress ,Karke ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா ஏற்பு