×

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லும் வழிகளில் எங்கும் கயிறு கட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் சுற்றித்திரிபவர்களையும் போலீசார் பிடித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தற்போது கன்னியாகுமரி கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் ராட்சத அலை எழுவதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தவிர்ப்பதற்காக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லெமூர் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியில் படித்துவிட்டு பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்த 5 பேர் ராட்சத அலையால் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தையே உலுக்கிய நிலையில், மாவட்ட கலெக்டர் தர் உத்தரவின்பேரில் தற்போது கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பணியை போலீசார் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம பகுதியில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுப்பதற்காக கயிறுகள் கட்டப்பட்டுள்ளன.

இதேபோல் சுற்றுலா பயணிகள் எங்கெல்லாம் கடலில் இறங்கி குளிக்க வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் கயிறு கட்டப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கடற்கரையோரம் சுற்றித்திரியும் சுற்றுலா பயணிகளிடம் நிலைமையை எடுத்துக்கூறி கடலில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துவிட்டு செல்கின்றனர்.
இருப்பினும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட படகு போக்குவரத்துக்கு தடை விதிக்கவில்லை. இருப்பினும் கட்டுப்பாடு காரணமாக இன்று கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

ஏற்கனவே வந்துவிட்ட வெளிநாடு, வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குதான் செல்ல முடியவில்லை படகு சவாரியாச்சும் சென்றுவரலாம் என படகில் ஏறி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிபார்த்து ஆறுதல் அடைந்தனர். கோடை விடுமுறையில் வீட்டில் இருக்க முடியாமல் கடற்கரைக்கு செல்லலாம் என நினைத்தாலும், பருவநிலை மாற்றத்தால் கடற்கரைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர்வாசிகளும் சோகத்தில் உள்ளனர்.

The post கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Tamil Nadu ,
× RELATED திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை..!!