- அரவிந்த் கெஜ்ரிவால்
- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- நீதிபதி
- சஞ்சீவ் கன்னா
- முதல் அமைச்சர்
- அமலாக்கத் துறை
- திகர்
- அமலாக்கத்திற்காக
டெல்லி : டெல்லி மதுபான கொள்கை வழக்கு கோப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. விசாரணை தொடர்ந்தபோது இந்த திட்டத்தில் கெஜ்ரிவாலின் பங்கு உறுதி செய்யப்பட்டது என்று அமலாக்கத்துறைம் அதில் தெரிவித்துள்ளது.
இதனை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, “ரூ.100 கோடி ஊழல் என்று கூறினீர்கள், பிறகு 2 ஆண்டுகளில் ரூ.1100 கோடியானது எப்படி?ரூ.100 கோடி லஞ்சம் கைமாறியது என்பது அமலாக்கத்துறை அதிகாரிகளின் மூளையில் உதித்ததா?”என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், ரூ.1100 கோடியில் மொத்த விற்பனையாளர் லாபம் ரூ.590 கோடி என விளக்கம் அளித்தார். லாபம் என்பதை ஊழலில் கிடைத்த பணம் என்று கூற முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு தொடர்பிருப்பதாக கண்டுபிடிப்பதை 2 ஆண்டுகள் ஆகுமா? வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை கவனம் செலுத்தவில்லையா? என காட்டமாக கேள்வி எழுப்பினர்.
புலனாய்வு விசாரணையின் போதுதான் கெஜ்ரிவாலின் பங்கு என்ன என்பது தெளிவானது என்று அரசு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,”முறைகேடுகளை கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் ஆனது என்று கூறுவது விசாரணை அமைப்புக்கு அழகல்ல. மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் தொடர்பு பற்றி முதல் கேள்வி எப்போது கேட்கப்பட்டது?. ஒருவரை கைது செய்யும் போது, சட்ட ஆதாரங்களை அதிகாரிகள் உறுதி செய்திருக்க வேண்டும். போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஒருவரை கைது செய்ய முடியும். அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குமூலங்களில் கெஜ்ரிவால் பெயர் குறிப்பிடப்பட்ட விவரங்களை தாக்க செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடுகிறோம். இவ்வழக்கின் கோப்புகளில் அதிகாரிகள் என்ன எழுதியுள்ளனர் என்பதை நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.வழக்கின் கோப்புகளில் முதல் 2 பாகங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தனர்.
The post அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.