×
Saravana Stores

சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் பாதாளசாக்கடை மேன்ஹோல் பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகனங்கள்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால், பாதாளசாக்கடை மேன்ஹோல் பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 26வார்டு பகுதிகளில் பாதாளசாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பல கோடி செலவில் சாலை பணிகள் நடந்துள்ளது. இதனை தவிர பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளும் நடந்து வருகிறது.

சாலைகள் போடும்போது பழைய சாலையை உடைத்து எடுத்து, அதனை அகற்றிவிட்டு புதிய சாலையை போட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மாநகர பகுதியில் பழைய சாலைகள் உடைக்கப்பட்டு, அதனை அகற்றிவிட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் ஒரு சில சாலைகளில் சாலைகளுக்கு மேல் புதிய சாலை போடும் பணி நடந்து வருகிறது.

மாநகர பகுதியில் பதிக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடை குழாய்கள் சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. குழாய்களை இணைத்து பல இடங்களில் மேன்ஹோல்கள் போடப்பட்டுள்ளது. பாதாளசாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மேன்ஹோல் மூலம் சரிசெய்யப்படும். மேலும் அடைப்புகளை எடுத்துவிடுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் நவீன வாகனமும் வாங்கப்பட்டுள்ளது.

சீரமைக்கப்பட்ட புதிய சாலைகளில் பல இடங்களில் மேன்ஹோல் உயரம் அதிகரிக்காமல் உள்ளதால், மேன்ஹோல் அமைந்துள்ள இடம் பள்ளமாக உள்ளது. குறிப்பாக கோட்டார் சவேரியார் கோயில் ஜங்சன் முதல் செட்டிகுளம் வரை, பறக்கை ஜங்சன் பிரிவு சாலையில் இருந்து இளங்கடை செல்லும் சாலை, வடிவீஸ்வரம் குறுக்கு சாலை என பல சாலைகளில் மேன்ஹோல்கள் உயர்த்தப்படாமல் உள்ளதால், பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மேன்ஹோல் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை இருந்து வருகிறது.

கடந்த சில மாதத்திற்கு முன்பு மாநகர பகுதியில் பல சாலைகளில் மேன்ஹோல்கள் உயர்த்தப்பட்டது. மேன்ஹோல்கள் உயர்த்தப்பட்ட இடத்தில் தற்போது எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் மேன்ஹோல் பள்ளமாக உள்ள இடங்களில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருவதால், உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மேல்கோல் உயரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் பாதாளசாக்கடை மேன்ஹோல் பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Patalasakadai ,Nagercoil Municipal Corporation ,Municipality ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு