×

ஒரே நாடு ஒரே ஜெர்சி!… காவி நிறத்தில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி : நெட்டிசன்கள் விமர்சனம்

மும்பை : டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியில் காவி நிறம் இடம்பெற்று இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 9வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 2ம் தேதி போட்டித் தொடங்கும் நிலையில், இந்திய அணி 5ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணிக்கு புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஜெர்சி மற்றும் உபகரணங்கள் விளம்பரதாரர் உரிமத்தை பெற்றுள்ள அடிடாஸ் நிறுவனம் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.

தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அணியின் ராட்சத ஜெர்சியை ஹெலிகாப்டர் சுமந்து வந்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை அடிடாஸ் தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாடு ஒரே ஜெர்சி! புதிய டீம் இந்தியா டி20 ஜெர்சியை வழங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளது. இதனை பிசிசிஐ ரீ-போஸ்ட் செய்துள்ளது. அதன்படி அந்த வீடியோவில் ஹெலிக்காப்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி பறக்கவிடப்பட்டிருக்கிறது. அதை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குல்தீப்யாதவ், ரவீந்திர ஜடேஜா பார்ப்பது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளது. இதுவரை இந்திய அணியின் ஜெர்சி நீல நிறத்தில் இருந்து வந்த நிலையில், புதிய ஜெர்சியின் 2 கைகளிலும் காவி நிறம் இடம்பெற்றுள்ளது. மேலும் காலரில் இந்திய கொடியை குறிக்கும் வகையில் மூவர்ணம் இடம்பெற்றுள்ளது. இந்திய அணியின் ஜெர்சி காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

The post ஒரே நாடு ஒரே ஜெர்சி!… காவி நிறத்தில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி : நெட்டிசன்கள் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,Mumbai ,9th T20 World Cup Cricket Series ,United States ,West Indian Islands ,Dinakaran ,
× RELATED வாழ்வா, சாவா நெருக்கடியில் பாகிஸ்தான்! கனடாவுடன் இன்று மோதல்