தேனி, மே 7: தேனி அருகே அன்னஞ்சியை சேர்ந்தவர் பாலகுருசாமி(69). தேனி புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் நிலையத்தில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தேனியில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. அன்றைய தினம் மாலை புதிய பஸ்நிலைய வளாகத்தில், கம்பம் பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள கட்டணக்கழிப்பறைக்கு முதியவர் பாலகுருசாமி சென்றார். அப்போது, கழிப்பறை முன்பாக திடீரென மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முதியவர் பணிபுரிந்து வந்த கடையின் உரிமையாளர் வெங்கடேசன் அளித்த தகவலின்பேரில், பாலகுருசாமியின் மகன் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போன அவரது தந்தையை பார்த்து, தேனி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில், தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரான டீ மாஸ்டர் இறந்த நாளன்று கடும் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், வெப்ப அலை ஏற்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு முதியவர் இறந்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஹீட் ஸ்ட்ரோக்கில் முதியவர் சாவு? appeared first on Dinakaran.