- வடக்கு மாநிலங்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செங்குன்ராம்
- புழல்
- வடக்கு
- மத்தியப் பிரதேசம்
- சென்னை
- செங்குன்ராம்
புழல்: மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வேலை தேடி படையெடுத்து வரும் வடமாநில மக்கள், செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் சுட்டெரிக்கும் வெயிலில் வெட்டவெளியில் தஞ்சம் அடைந்துள்ளனர். எவ்வித வசதிகளுமின்றி வறுமையில் வாடும் வடமாநில மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சென்னை செங்குன்றத்தில் சாமியார் மடம் என்ற பகுதி உள்ளது. சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏராளமான வடமாநில மக்கள் தஞ்சம் அடைந்தனர். இந்த கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் அங்குள்ள ஓட்டல்கள், டீ கடைகள், திருமண மண்டபங்கள், அரிசி அரவை ஆலைகளில் தினக்கூலிகளாக வேலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், ஒட்டுமொத்த வடமாநில மக்களும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று மாயமான நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் சாமியார் மடம் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வடமாநில மக்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: மத்திய பிரதேசம் மாநிலம் அமராவதியில் வசித்து வந்தோம். எங்களது மாநிலத்தில் உள்ள அமராவதி பகுதியில் இருந்து சுமார் 120 கிமீ தூரம் உள்ள நாக்பூரில் மட்டுமே தொழிற்சாலைகள் உள்ளன.
நாங்கள் அங்கு சென்றபோது, எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், அனைவரும் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து சாலையோரத்தில் தங்கி இருக்கிறோம். இங்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களில் கழிப்பறைகள் சுத்தம் செய்வது உள்பட பல்வேறு பணிகளை செய்து, எங்களது குழந்தைகளுடன் பிழைத்து வருகிறோம். எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில், அவசர காலங்களில் புழல் ஏரிக்கரையில் ஒதுங்க வேண்டியுள்ளது.
குடிப்பதற்கு, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தண்ணீர் தருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. காலை முதல் மாலை வரை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை நிலையில் ஒருவேளை உணவுக்காக கிடைக்கும் வேலைக்கு சென்று வருகிறோம்.
இரவு நேரங்களில் சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தும் டிரைவர்கள், அவர்களுடன் வரும் கிளீனர்கள், எங்களுடன் உள்ள பெண்களிடம் பல்வேறு சில்மிஷங்களில் ஈடுபடுகிறார்கள். பாலியல் தொல்லை தினமும் ஏற்படுகிறது. அவர்களை, எங்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. கடந்த 26ம் தேதி, எங்களது மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது எங்களை பணம் கொடுத்து சிலர் அழைத்து சென்றனர்.
அங்கு வாக்குப்பதிவு செலுத்திய பின்னர், மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விட்டுச் சென்றனர். எங்களது சொந்த ஊரில், எங்களுக்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எல்லாமே இருக்கிறது. ஆனால், வேலை மட்டும் இல்லை. அதனால் பிழைப்புக்காகவும், மனைவி பிள்ளைகளை காப்பாற்றவும் இங்கு வந்துள்ளோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இங்குள்ள மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லை எனவே, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், மத்திய பிரதேச மக்கள் தஞ்சம் அடைந்தது குறித்து அம்மாநில தலைமைச் செயலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள மக்களுக்கு நாட்டில் உள்ள அரசு உயர் அதிகாரிகள், இந்த மக்கள் தஞ்சமடைந்தை பற்றி, சம்பந்தப்பட்ட மாநில தலைமை செயலருக்கு தகவல் தெரிவித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சாத்தியம் இல்லாவிட்டால், இங்குள்ள பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அடிப்படை உதவிகளை செய்துகொடுக்க வேண்டும் என்றனர்.
The post வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.