- தீபாவளி
- சாத் பண்டிகை கூட்டங்கள்
- கேரளா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வடக்கு மாநிலங்கள்
- சாத் திருவிழாக்கள்
- வடக்கு
- தின மலர்
சேலம்: தீபாவளி, சாத் பண்டிகையையொட்டி கேரளா, தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயணிக்கின்றனர். இதனால், எதுவும் செய்ய முடியாமல் ரயில்வே நிர்வாகம் தவித்து வருகிறது. நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாளில் பீகார், உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட் மாநில மக்கள் உற்சாகமாக கொண்டாடும் சாத் பண்டிகை வருகிறது. இதனால், கேரளா, தமிழ்நாட்டில் தங்கியிருந்து கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளை பார்த்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதன்காரணமாக கேரளா, தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், கடந்த 3 நாட்களாக நிரம்பி செல்கிறது.
குறிப்பாக பீகார் மற்றும் உத்திரபிரதேசத்திற்கு இயக்கப்படும் ரயில்களில் இடமின்றி, கடும் கூட்ட நெரிசலில் தொழிலாளர்கள் பயணிக்கின்றனர். இதில், முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி-கோர்பா எக்ஸ்பிரஸ், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் நேற்று முதல் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து புலம் பெயர்வு தொழிலாளர்கள் பயணிக்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே இன்று அதிகாலை சென்ற பாட்னா எக்ஸ்பிரசில் பயணிகள் கூட்ட நெரிசல் மிக அதிகளவு இருந்தது. 2ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில், தரையில் அமர்ந்துகொண்டு ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்தனர். அந்த பெட்டிகளில் முறையாக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளால், ரயிலில் ஏற கூட முடியவில்லை. அந்த அளவிற்கு தொழிலாளர்கள் ஏறிக்கொண்டு, அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்து கொண்டனர். ஒவ்வொரு பெட்டியிலும் 300க்கும் அதிகமானோர், கடும் நெருக்கடிக்கிடையே ஏறி பயணித்தனர்.
இதனை கட்டுப்படுத்த முடியாமல் ரயில்வே அதிகாரிகள் தவிப்பிற்குள்ளாகினர். ஈரோட்டிலும், சேலத்திலும் அந்த பெட்டிகளில் யாரையும் ஏற்றி, இறக்க முடியாத நிலையில் ரயில் புறப்பட்டு சென்றது. அதேபோல், இன்று காலை தன்பாத் எக்ஸ்பிரசிலும் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து வட மாநில தொழிலாளர்கள், தங்களது குடும்பத்துடன் சென்றனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “வட இந்தியாவில் சாத் பண்டிகையை கொண்டாட இங்கிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவு செல்கின்றனர். இதனால், பல சிறப்பு ரயில்களை இயக்கியும், வழக்கமான ரயில்களில் கூட்டம் அதிகம் உள்ளது. மொத்தமாக வந்து முன்பதிவு பெட்டிகளில் அவர்கள் ஏறி கொள்வதால், இறக்க முடியவில்லை. வேறு வழியின்றி அப்படியே விட்டு விடுகிறோம். பண்டிகை காலங்களில் இத்தகைய நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. வரும் காலங்களில் இந்நிலையை போக்க கூடுதலான முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
The post தீபாவளி, சாத் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசல்: முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து வடமாநில தொழிலாளர்கள் பயணம்.! எதுவும் செய்ய முடியாமல் ரயில்வே நிர்வாகம் தவிப்பு appeared first on Dinakaran.