×

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் ேதர்ச்சி பெற்றுள்ளனர். 7 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி, 22ம் தேதி வரை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் இத்தேர்வை மாணவர்கள் 11,863 பேரும், மாணவிகள் 13,762 பேரும் என மொத்தம் 25,625 பேர் 105 தேர்வு மையங்களில் எழுதினர்.

இதில் மாணவர்கள் 10,410 பேரும் மாணவிகள் 12,991 என மொத்தம் 23,401 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆண்கள் 87.75 சதவிகிதமும் மாணவிகள் 94.40 சதவிகிதமும் என மொத்தம் 91.32 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை, 102 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 5,230 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 4,041 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 77.27 ஆகும். மாணவிகள் 6,767 பேர் தேர்வு எழுதினர். இதில் 6,121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 90.45 ஆகும். மொத்தமாக மாவட்டத்தில் 11,997 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 10,162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 84.70 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் நான்கு அரசு பள்ளிகள், ஒரு ஆதிதிராவிட நலப் பள்ளி, பகுதி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றும் முழு அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றும் என 7 பள்ளிகள் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

பொன்னேரி தாலுகா தேர்வாய் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 19 பேர் தேர்வு எழுதி 19 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் அலமாதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 97 பேர் தேர்வு எழுதி 97 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஞாயிறு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 41 பேர் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பேரம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவிகள் தேர்வு எழுதியதில் 97 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வேப்பம்பட்டில் உள்ள மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 125 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பகுதி அரசு உதவி பெறும் பள்ளியான ஆரம்பாக்கத்தில் உள்ள செயின்ட்மேரிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 102 மாணவிகள் தேர்வு எழுதியதில் 102 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசின் முழு நிதி உதவி பெறும் பள்ளியான கீழச்சேரியில் உள்ள சேக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 144 மாணவிகள் தேர்வு எழுதியதில் 144 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஆட்டோ டிரைவர் மகள் முதலிடம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பூங்கோதை என்ற மாணவி, முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே 578 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவியாக வந்துள்ளார். இதுகுறித்து பூங்கோதை கூறுகையில், ‘‘பள்ளியில் ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர். வீட்டில் எந்தவித தடையும் இல்லாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொண்ட காரணத்தினால் இந்த மதிப்பெண் பெற முடிந்தது.

பி.காம் படித்து முடித்துவிட்டு அடுத்ததாக எம்.எஸ்.டபிள்யூ படிக்க விரும்புகிறேன்,’’ என்றார். முதல் மதிப்பெண் பெற்ற பூங்கோதையின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தாய் சிவகாமி வீட்டு வேலை செய்து வருகிறார். இதே பள்ளியில் பயின்ற ஹரிணி பிரியா மற்றும் திவ்யஸ்ரீ ஆகிய 2 மாணவிகளும் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே 3வது இடம் பிடித்துள்ளனர். இவர்கள் 573 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் ஹரிணி பிரியா வியாசர்பாடியைச் சேர்ந்தவர்.

கணவரை பிரிந்த நிலையில், பானு ஹரிணி பிரியாவை படிக்க வைத்து வந்துள்ளார். இதேபோன்று திவ்யஸ்ரீ என்ற மாணவி கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை வினோத்குமார் காவலாளியாக வேலை செய்து வருகிறார். மூன்றாம் இடம் பிடித்த ஹரிணி பிரியா மற்றும் திவ்யஸ்ரீ ஆகிய 2 மாணவிகளும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

* பார்வையற்றோர் பள்ளி 95% தேர்ச்சி
பூந்தமல்லியில் பார்வை குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளிகள் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பார்வை குறைபாடுடைய 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் 1 முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் இருபாலருக்கும் தனித்தனியாக உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வையற்றோருக்கான தொழில் பயிற்சி மையம், பார்வையற்றோருக்கான அரசு பெண்கள் மறு வாழ்வு இல்லம், வட்டார ப்ரெய்லி அச்சகம், இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம் மற்றும் பார்வையற்றோருக்கு கற்பிக்கும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி மையம் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்நிலையில், இப்பள்ளியை சேர்ந்த 19 மாணவ -மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்தனர்.

தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில், ஒரு மாணவன் மட்டும் தமிழ் தேர்வு மட்டும் எழுதாமல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.  தற்போது, பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 19 பேரில் 18 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும், நடக்கும் பொதுத்தேர்வில் பார்வை திறன் குறைபாடுடையோர், அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் இருக்கும். ஆனால், ஒரு மாணவன் ஒரு தேர்வு எழுதாமல் இறந்துபோனதால், இம்முறை தேர்ச்சி விதம் 95 சதவீதமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur District ,Tiruvallur ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்...