×

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை

 


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா- பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்தபடி இருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, பெண்னை கடத்திய புகாரில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான எச். டி. ரேவண்ணாவை கைது செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். எச்.டி.ரேவண்ணாவால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய பெண்னை நேற்று எஸ்டிஐ அதிகாரிகள் பெங்களூரு பசவனகுடியில் உள்ள ரேவண்ணா வீட்டிற்கு நேரில் அழைத்து சென்று சுமார் 5 மணி நேரம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. அதை தொடர்ந்து அவரை நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியிடம் தனக்கு நடந்த கொடுமைகளை அவர் வாக்கு மூலமாக கொடுத்ததாக தெரியவருகிறது. இதனிடையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யகோரி எச்.டி.ரேவண்ணா தரப்பில் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரணை நடத்தும் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது. பாலியல் புகார் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர இன்டர் போல் மூலம் எஸ்ஐடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஜெர்மனி நாட்டில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த சனிக்கிழமை இரவு துபாய் வந்துள்ளதாகவும், அங்கிருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அல்லது மங்களூரு பஜ்பே விமான நிலையம் வழியாக வருவதாக தெரியவந்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இருப்பதால், இரு விமான நிலையத்தில் எதில் வந்திறங்கினாலும் விமான நிலைய போலீசார் கைது செய்து முறைப்படி எஸ்ஐடி அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிய வருகிறது.

வீடியோக்கள் பரப்பினால் நடவடிக்கை
கர்நாடக சிஐடி கூடுதல் டிஜிபி வி.கே.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாலியல் புகார் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பெண்களின் வாழ்க்கை, பாதுகாப்பு, கவுரவ பிரச்னையாக இருப்பதால், இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். இந்த தவறான செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

The post பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை appeared first on Dinakaran.

Tags : SID police force ,Prajwal Revanna ,Pasavanagudi ,Bangalore ,Karnataka ,Devakavuda ,Revanna ,minister ,MLA ,H.E. ,SID ,Pasavanagudi House ,
× RELATED நாட்டை உலுக்கிய பாலியல் புகாரில்...