சென்னை: தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துள்ள நிலையில் வெப்ப அலையும் வீசி வருகிறது. வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவும் காரணத்தால் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. இந்நிலையில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதே நிலை 9ம் தேதி வரை நீடிக்கும்.
இதற்கிடையே, வட தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களில் நேற்று வெப்ப அலை வீசியது. அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, ஈரோடு, வேலூர் 109 டிகிரி, திருத்தணி, மதுரை விமான நிலையம் 108 டிகிரி, பாளையங்கோட்டை, சேலம், திருப்பத்தூர் 106 டிகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், கோவை 102 டிகிரி வெயில் பதிவானது. வெப்ப அலையை பொறுத்தவரை தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது. நாளை வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் சில இடங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் appeared first on Dinakaran.