×

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023 கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் செயல்முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. இதன் அடிப்படையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களாக அறிவிக்கப்பட்ட 46,932 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் 146 மாணவர்கள் (82 ஆண்கள் மற்றும் 64 பெண்கள்) அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் 2022-2023 கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதி குறைந்த குறியீட்டு மதிப்பெண்கள் பெற்ற 65,823 மாணவர்களுக்கு ‘104’ – தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ – நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள் மூலம் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு (2023-2024) 7,60,606 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவர்கள் (32,164 ஆண்கள் மற்றும் 19,755 பெண்கள்) என பட்டியலிடப்பட்டு அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

இந்த சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ‘104’ – தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ – நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம், சுகாதாரத்துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மன நல ஆலோசகர்களை கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 30 மன நல ஆலோசகர்கள் 3 சுழற்சிமுறையில் செயல்படுவார்கள். ‘104’ – தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் 10 இருக்கைகளுடன் டிஎம்எஸ் வளாகத்தில் 30 மன நல ஆலோசகர்களை கொண்டும், ‘14416’ – நட்புடன் உங்களோடு மனநல சேவை மையமானது 10 இருக்கைகளுடன் 30 மன நல ஆலோசகர்கள், 4 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் 1 மன நல மருத்துவரை கொண்டு செயல்படுகிறது.

இதில், அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களை அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபெறுவதற்காக மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் மன நல உளவியலாளர்கள், மன நல மருத்துவர் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபெற்று நல்வாழ்வு அமைந்திட ஆலோசனை வழங்கப்படுகிறது. மனநல ஆலோசனைகளுக்கு மருத்துவ உதவி எண் ‘104’ மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண் ‘14416’ ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department of Public Welfare ,Chennai ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...