சென்னை: இந்தியாவின் பிரதான கட்சியான திமுகவுக்கு என்றும் மதிமுக பக்கபலமாக இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இதில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர், வைகோ அளித்த பேட்டி: திமுகவின் 30 ஆண்டுகால தொண்டனாக இருந்து 1994 மே 6ம் தேதி மதிமுகவை தொடங்கினோம். என்னோடு இருந்தவர்கள் பல்வேறு இன்னல்களை தாங்கியவர்கள். 7 ஆயிரம் கிலோமீட்டர் தமிழகத்தில் நான் நடந்திருக்கிறேன். குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் ராஜபக்சே வருகை தரவுள்ளதை அறிந்து தொண்டர்களுடன் கருப்புக்கொடி காட்டச்சென்று அங்கு கைதாகி தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டோம். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 15 ஆண்டுகாலம் தொடர்ந்து போராடி, நீதிமன்றத்தையும் அணுகியுள்ளோம். அதன்படி, ஸ்டெர்லைட் ஆலை மூடிய வெற்றி மதிமுகவை சேரும்.
இதுதவிர, மகாராஷ்டிராவில் இருந்து விரட்டப்பட்ட நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டு கோடி கணக்கில் செலவழித்து விட்டார்கள். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை ஆணை பெற்றோம். அதேபோல், காவிரி பிரச்னைக்கும் நெடுங்காலமாக போராடி வருகிறோம். மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக அரசு ரூ.957 கோடி ஒதுக்கி உள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேகதாது அணை கட்டுவதில் ஒன்றிய அரசு கர்நாடக அரசுக்கு ஒத்துழைக்கிறது.
இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும். தற்போது தமிழ்நாட்டின் முதல்வரான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி எங்களுடைய போராட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. மதிமுக சார்பில் குடை சின்னம், பம்பரம் சின்னம் மற்றும் தற்பொழுது தீப்பெட்டி சின்னம் என போட்டியிட்டு இருக்கிறோம். இனி வருங்காலத்தில் நிரந்தர சின்னத்தை வசமாக்குவோம். இந்தியாவின் பிரதான கட்சியான திமுகவுக்கு என்றும் மதிமுக பக்கபலமாக இருக்கும். தேர்தல் பிரசாரங்களில் பிரதமரின் பேச்சு தரங்கெட்டு தரக்குறைவாக இருக்கிறது. வருங்காலங்களிலும் பெரும்பான்மையுடன் திமுகழகமே ஆட்சி அமைக்கும்.
The post 31வது ஆண்டு விழா திமுகவுக்கு என்றும் மதிமுக பக்கபலமாக இருக்கும்: வைகோ பேட்டி appeared first on Dinakaran.