சென்னை: தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும்என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் தவிர மீதமுள்ள நேரங்களில் சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் விவசாயத்திற்கு வழங்கப்படுகிறது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது. விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவது சாத்தியமானது தான்.
அதற்காக 300 மெகாவாட் முதல் 500 மெகாவாட் மின்சாரம் மட்டும் தான் கூடுதலாக செலவாகும். அதுமட்டுமின்றி, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொள்வார்கள். அதனால், உச்சப்பட்ச மின்சாரம் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் நீர் இறைப்பான்களை பயன்படுத்துவது குறையும். இதன்மூலம் அனைத்து தரப்பினருக்கும் தடையற்ற மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க முடியும். எனவே, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
The post விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.