×
Saravana Stores

நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில் விளையாடிய போது கடலில் மூழ்கி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் பலி: 3 பேர் உயிருடன் மீட்பு

ஈத்தாமொழி: நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில் விளையாடியபோது கடலில் மூழ்கி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய பெருங்கடலில் மே 4 மற்றும் 5ம் தேதிகளில் அதிக தாக்கத்துடன் கடல் சீற்றம் இருக்கும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. கடலில் 1.5 மீட்டர் அலைகளின் உயரம் இருக்கும். 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வேகமாக வீசும்.

எனவே மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்திருந்தார். மாவட்டத்தில் நேற்று முன்தினம் கடல் அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் யாரும் கடலில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி வரும் 17 பேர் நாகர்கோவில் கோட்டார் செட்டிக்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த சக மாணவர் ஒருவரின் சகோதரர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தனர். திருமண நிகழ்ச்சி முடிந்து, இரவு நாகர்கோவிலில் தங்கினர்.

பின்னர் நேற்று காலை இவர்களில் 5 பேர், திற்பரப்பு அருவிக்கு சென்றனர். மற்றவர்களான நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித் (23), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரவீன் சாம் (23), கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த காயத்ரி (25), சென்னையில் வசித்து வரும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வெங்கடேஷ் (24), தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த சாரு கவி (23), கரூர் பகுதியை சேர்ந்த நேசி (24), தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பிரீத்தி பிரியங்கா (23), மதுரையை சேர்ந்த சரண்யா (24) உட்பட 12 பேர், கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு காரில் நாகர்கோவில் அடுத்த கணபதிபுரத்தில் உள்ள லெமூர் பீச்சுக்கு காலை 10 மணியளவில் வந்தனர்.

கடல் அழகை பார்த்ததும் துள்ளி குதித்து, அலைகளில் கால்களை நனைத்து விளையாடினர். செல்போனில் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை, இவர்களில் 2 பேரை உள்ளே இழுத்து சென்றது. இதை பார்த்ததும் அருகில் நின்ற மற்ற மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து உள்ளே இறங்கி காப்பாற்ற முயன்றனர். ஆனால் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் கண் இமைக்கும் நேரத்தில் அவர்களும் இழுத்து செல்லப்பட்டனர். வெளியில் நின்றவர்கள் இதை பார்த்து கூச்சல் போட்டனர். உடனடியாக சுற்றுலா பயணிகள் சேர்ந்து கடலில் தத்தளித்தவர்களை காப்பாற்ற முயன்றனர்.

தீயணைப்பு துறை, ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கும், குளச்சல் மரைன் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்கு முன் நேசி, பிரீத்தி பிரியங்கா, சரண்யா மற்றும் சர்வ தர்ஷித் ஆகியோர் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிரவீன் சாம், காயத்ரி, வெங்கடேஷ், சாரு கவி ஆகிய 4 பேரை காணவில்லை. அவர்களை தீயணைப்பு துறையினர், மரைன் போலீசார் வந்து படகில் தேடினர்.

சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின் 4 பேரும் சடலமாக மீட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே தீவிர சிகிச்சையில் இருந்த சர்வ தர்ஷித் என்பவரும் உயிரிழந்தார். இவர்கள் 5 பேரின் உடல்களை பார்த்து சக மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். நேசி, பிரீத்தி பிரியங்கா, சரண்யா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் மரைன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்ததும் எஸ்.பி. சுந்தரவதனம் லெமூர் பீச் பகுதிக்கு வந்து பார்வையிட்டு, போலீசாரிடம் விசாரித்தார். 5 பேர் பலியானதை தொடர்ந்து லெமூர் பீச் பகுதியில் நின்ற மற்ற சுற்றுலா பயணிகளும் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். நுழைவாயிலில் ஆழமான கடல், அழகான கடல், ஆபத்தான கடல் என்ற வாசகத்துடன், கடலில் குளிக்க தடை செய்யப்பட்டு உள்ளது என்று எச்சரிக்கை பேனர் ஒட்டப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கடற்கரைக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

* எச்சரிக்கை செய்தும் கேட்கவில்லை
லெமூர் பீச் காவலாளி மகாலிங்கம் கூறுகையில், ‘தடை உத்தரவு இருந்ததால் நான் கேட்டை திறக்கவில்லை. அருகில் இருந்த மற்றொரு வழியாக சுற்றுலா பயணிகள் வந்து விட்டனர். சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தினர் வந்தனர். அவர்களை கடலில் இறங்காதீர்கள் என கூறினேன். அப்போது தான் இந்த மாணவர்கள் கும்பலாக வந்தனர். அவர்களை கடலில் இறங்காதீர்கள் என விசில் அடித்து கூறினேன். நான் எச்சரிக்கை செய்ததை அவர்கள் கவனிக்கவில்லை. விசில் அடித்துக் கொண்டே இருந்தேன். அந்த சமயத்தில் தான் திடீரென அலையில் அவர்கள் அடுத்தடுத்து சிக்கினர்’ என்றார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்து: கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் கிராமம், லெமூர் கடற்கரையில், நேற்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியுள்ளனர். அப்போது, கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியை சேர்ந்த காயத்திரி (25), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சர்வதர்ஷித் (23), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவின்சாம் (23), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சாருகவி (23) மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (24) ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இந்த மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இந்த துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* மாணவியை காப்பாற்றிய மக்கள்
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த பவித்ரா, கணவர் மற்றும் குடும்பத்துடன் வந்திருந்தார். இவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். கடலில் மாணவர்கள் மூழ்கியதை பார்த்ததும் இந்த குடும்பத்தினர் தான் முதலில் பார்த்து கூச்சலிட்டனர். இவர்கள் போனில் இருந்து தான் தீயணைப்பு துறை, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பவித்ராவின் கணவர் சரவணன் மற்றும் சிலர் சேர்ந்து தான் மாணவி நேசியை காப்பாற்றினர்.இது குறித்து பவித்ரா கூறுகையில், ‘சம்பவம் காலை 10.15 மணிக்கு நடந்தது. சிறிது நேரத்தில் தீயணைப்பு துறை அல்லது மீட்பு படகில் போலீசார் வந்திருந்தால் இவர்களை காப்பாற்றி இருக்கலாம். கடலில் அவர்கள் கதறியபடி இழுத்து செல்லப்பட்டதை நேரில் பார்த்து நாங்களும் கதறினோம். உதவிக்கு கூட ஆட்கள் யாரும் முதலில் இல்லை. இவ்வளவு ஆபத்தான கடல் பகுதியை ஏன் சுற்றுலாதலமாக வைத்துள்ளார்கள் என தெரியவில்லை. உடனடியாக இதை மூட வேண்டும்’ என்றார்.

* பட்டம் வாங்காமல் உயிரை விட்ட டாக்டர்கள்
உயிரிழந்த 5 பயிற்சி டாக்டர்களும், மருத்துவ படிப்பை நிறைவு செய்து விட்டனர். இவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது. அதற்குள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லெமூர் பீச்சில் கால் நனைத்து மகிழ்ச்சியாக இருந்ததை போட்டோ சூட் செய்து, நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்காமல் உயிரிழந்து விட்டனர்.

The post நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில் விளையாடிய போது கடலில் மூழ்கி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் பலி: 3 பேர் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Lemur Beach ,Nagercoil ,Ethamozhi ,South Indian Ocean ,Dinakaran ,
× RELATED லெமூர் பீச்சில் கள்ளக்கடல்...