×

புழல் சிறைக்கு கொண்டு சென்றபோது ஆட்டோவில் இருந்து குதித்து பைக் திருடன் தப்பியோட்டம்

பெரம்பூர்: புழல் சிறையில் அடைக்க கொண்டுசென்றபோது ஆட்டோவில் இருந்து குதித்து பைக் திருடன் தப்பி ஓடிவிட்டார். சென்னை ஓட்டேரி பட்டாளம் சூரத் பவன் தெரு பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 29ம் தேதி இரவு 10 மணியளவில் தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சஞ்சய்குமார் கொடுத்த புகாரின்படி, ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், புளியந்தோப்பு சரக உதவி கமிஷனர் ராஜா தலைமையில் தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை பகுதியில் புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (25) என்பவரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் பைக்கை திருடியது பதிவாகியிருந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்காக உதவி ஆய்வாளர் பாஸ்கர், தலைமை காவலர் மகேந்திரன் ஆகியோர் ஒரு ஆட்டோவில் மனோஜ்குமாரை அழைத்துச்சென்றனர்.

புளியந்தோப்பு நெடுஞ்சாலை செங்கை சிவம் மேம்பாலம் சந்திப்பு பகுதியில் வந்தபோது பசிக்குது என்று மனோஜ் கேட்டதால் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு ஏட்டு மகேந்திரன் அங்குள்ள கடையில் பிரியாணி வாங்க சென்றார். அந்த சமயத்தில்திடீரென ஆட்டோவில் இருந்து குதித்து மனோஜ்குமார் தப்பிவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post புழல் சிறைக்கு கொண்டு சென்றபோது ஆட்டோவில் இருந்து குதித்து பைக் திருடன் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Perambur ,Sanjay Kumar ,Surat Bhawan Street ,Otteri Pattalam, Chennai ,
× RELATED ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்