விராலிமலை, மே6: விராலிமலையில் நடந்து சென்ற வாலிபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூவர் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்துச் சென்றனர். சிசிடிவி காட்சி பதிவை கொண்டு போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு, கடைகளில் திருட்டு, வீட்டு பூட்டை உடைத்து திருட்டு என்ற குற்றச்சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போலீசார் பற்றாக்குறை மற்றும் போலீசாரின் தொடர் கண்காணிப்பு குறைபாடே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற சம்பவம் பொதுமக்களை மிகவும் அதிர்சிக்குள்ளாக்கி உள்ளது. விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரம் அருகே வாலிபர் ஒருவர் கையில் அவரது செல்போனை மற்றொருவருக்கு போன் செய்வதற்கு எழுத்தவாறு நடந்து செல்கிறார். அப்போது பின்னால், ஒரே விலை உயர்ந்த பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபர் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு வாகனத்தை வேகமாக செலுத்தி செல்கின்றனர்.
செல்போனை பறி கொடுத்தவர் சற்று தூரம் வண்டியை துரத்தி பார்த்தும் அவர்கள் தப்பி விடுகின்றனர்.
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி மற்றும் இரவு நேரங்களில் நடைபெற்று வந்த இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலேயேயும் அதுவும் பட்டப்பகலிலே நடைபெற்றுள்ளது என்பது மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. செல்போனை பறிக்கும் காட்சி அங்குள்ள உணவகம் ஒன்றில் உள்ள சிசிடிவி பதிவில் தெளிவாக தெரிவதை தொடர்ந்து சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
The post விராலிமலையில் பட்டப்பகலில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.