×

களக்காடு பகுதியில் முக்கிய நீராதாரமாக விளங்கும் உப்பாற்றில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் பாதிப்பு

களக்காடு, மே 6: களக்காட்டில் உப்பாற்றில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் குப்பைகளை எரிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி மக்களின் முக்கிய குடிநீராதாரமாகவும், நீலத்தடி நீராதாரமாகவும் உப்பாறு உள்ளது. உப்பாற்றில் பொதுமக்கள் சிலர் வீட்டில் தேங்கும் குப்பைகளை கொட்டி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் தற்போது உப்பாறு குப்பை கொட்டும் இடமாக நிரந்தரமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்நிலையில் உப்பாறு விஸ்வகர்மா தெரு இறக்கத்தில் படித்துரையையொட்டிய பகுதியில் குப்பை கொட்டுவது வழக்கமான நிகழ்வாக நடந்து வருகிறது.

இந்த குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தனது வேலையாட்களை வைத்து முறையாக சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் உப்பாற்றில் வீசப்படும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால் உப்பாற்றை சுற்றியுள்ள பகுதிகள் புகை மண்டலமாக காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு படுவதோடு அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனிடையே உப்பாற்றையொட்டி வசிக்கும் சில பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் போட்டு எரிப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்பள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே உப்பாற்றில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குப்பைகளை எரிப்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வலியுறுத்தி உள்ளார்.

The post களக்காடு பகுதியில் முக்கிய நீராதாரமாக விளங்கும் உப்பாற்றில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Uppa ,Kalakadu ,Nellai district ,Dinakaran ,
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்