×

5,662 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 2024-2025ம் கல்வியாண்டில் இளநிலை எம்பிபிஎஸ், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவு தேர்வு நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, எஸ்வி ரோடு டான் சிக்ஷாலயா பப்ளிக் பள்ளி, ஸ்ரீவிஜய் வித்யாஸ்ரமம் சீனியர் செகண்டரி பள்ளி, நல்லானூர் ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரி, பென்னாகரம் மெயின்ரோடு விஜய் மில்லினியம் பள்ளி, வாரியார் பள்ளி, தர்மபுரி செட்டிக்கரை கேந்திர வித்யாலயா பள்ளி, தர்மபுரி பாலக்கோடு ரோடு கமலம் இன்டர்நேஷனல் பள்ளி என 8 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

தேர்வு மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடந்தது. 5,758 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில், 5,622 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 136 பேர் தேர்வெழுத வரவில்லை. காலை 11 மணிக்கே, மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் தேர்வு மையத்தின் முன்பு குவிந்தனர். மாணவ, மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே, தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்பட்டது. கையில் கயிறு, இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டியிருந்த மாணவர்கள், அதனை அகற்றிய பின்னரே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்கள் அணிந்திருந்த உள்பனியனை கூட கழற்றும்படி அதிகாரரிகள் கூறினர். உள்பனியன் அணிந்திருந்த மாணவர்கள் அதனை கழற்றிய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் தங்கள் ஜடைகளை அகற்றி விட்டு, தலைவிரி கோலமாக ரப்பர் பேண்ட் போட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சிலர் தங்களது அடையாள அட்டையை எடுத்து வரவில்லை. பின்னர், அவர்களுடன் வந்த பெற்றோர்கள் அவசரம், அவசரமாக சென்று ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை எடுத்து வந்து காண்பித்த பின்னர், மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒருசில மாணவர்கள் அடையாள அட்டை நகல் எடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் அசல் எடுத்துவந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என்றனர். இதையடுத்து மாணவர்கள், பெற்றோரிடம் கூறி அசல் எடுத்து வந்த பின்னரே, தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 5.20 மணிக்கு தேர்வு முடிந்து மாணவ, மாணவிகள் வெளியே வந்தனர். அப்போது தேர்வு மையத்தின் முன்பு உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேர்வு மையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தேர்வு எழுதி விட்டு வந்த மாணவர்கள் கூறுகையில், ‘உயிரியல் பாடப்பிரிவு கேள்விகள் சற்று எளிதாக இருந்தது. இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவு நடுநிலைமையாக இருந்தது,’ என்றனர். ஒருசிலர் இயற்பியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்றனர்.

The post 5,662 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,MBBS ,Athiyamankottai Senthil Public School ,SV Road Don Sikshalaya Public School ,Srivijay Vidyashram ,
× RELATED மாணவர் சேர்க்கைக்கு 31 வரை கால அவகாசம்