×

தமிழ்நாட்டில் கடல் சீற்றம் இன்றும் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காற்றின்போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலை, கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்தது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.

இதன் ஒரு பகுதியாக குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகள் ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக திருச்செந்தூரில் கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அதீத அலை, கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை இன்று வரை நீட்டிக்கப்படுவதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை, கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், உவரி, கூடங்குளம் பகுதிகளில் கடல் அதீத சீற்றத்துடன் காணப்படும். கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும், கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடல் சீற்றம் இன்றும் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Indian Meteorological Department ,South Tamil Nadu ,Kerala ,Karnataka ,Mumbai ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு