×

கிழக்கு மாவட்ட தலைவர் படுகொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லையில் காங்கிரசார் போராட்டம்

நெல்லை, மே 5: நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் கேபிகே ஜெயக்குமார் படுகொலைக்கான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வண்ணார்பேட்டையில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி களக்காட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மாயமான நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் தோட்டத்தில் மீட்கப்பட்டது.

இதனால் அவரை மர்மநபர்கள் படுகொலை செய்து எரித்திருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், கேபிகே ஜெயக்குமார் படுகொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை போலீசார் விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்ைலயில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரசார் திடீரென சாலையில் சேர்களை போட்டு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ், மாவட்ட துணை தலைவர்கள் மாரியப்பன், வெள்ளப்பாண்டியன்,ராகுல் காந்தி பேரவை பொறுப்பாளர் தனசிங் பாண்டியன், இளைஞர் காங். ராஜிவ்காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்ட காங்., அலுவலகம் முதல் வண்ணார்பேட்டை வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார், பஸ், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியல் போராட்டம் சுமார் 20 நிமிடம் நடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாளை. இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து காங்கிரசார் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

களக்காடு: இதே கோரிக்கையை வலியுறுத்தியும், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் களக்காட்டில் இந்திரா காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றியத் தலைவர்கள் பிராங்ளின், அருணா, நகராட்சி தலைவர் ஜெபஷ்டின்ராஜ், உப்பூரணி பால்ராஜ், ஆறுமுகம், தர்மலிங்கம், முத்துக்குட்டி, பிரேம்குமார், முத்துராஜ் ஆண்ட்ரூஸ், இசக்கிமுத்து, செல்வராஜ், பொன்னையாதாஸ், கான், அன்னகவுரி உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
அம்பை: இதேபோல் அம்பையில் ஸ்டேட் பேங்க் அருகே காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அம்பை நகரத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அந்தோனிசாமி, அம்பிகா மாணிக்கம், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் சம்சுதீன், அமைப்பு சார தொழிலாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் சிவகுருநாதன், வட்டாரத் தலைவர் சண்முகக்குட்டி, ஐஎன்டியுசி நஜ்முதீன், மணிமுத்தாறு நகர தலைவர் சிவக் குமார், கல்லிடை நகர தலைவர் கைக்கொண்டான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post கிழக்கு மாவட்ட தலைவர் படுகொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லையில் காங்கிரசார் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Eastern ,District ,President ,Nellai East District Cong ,Vannarpet ,KPK ,Jayakumar ,Congress ,East District ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட நெல்லை...