×
Saravana Stores

9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள் எழுதுகின்றனர் அனைத்து ஏற்பாடுகள் தயார் வேலூர் மாவட்டத்தில் இன்று

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துறையில் சேருவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) இன்று நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்ததை சேர்ந்த 5,266 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

அவர்கள் தேர்வு எழுதுவதற்காக விஐடி பல்கலைக்கழகம், சிருஸ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிருஸ்டி வித்யாஷரம் மேல்நிலைப்பள்ளி, சன்பீம் பள்ளி, ஸ்பார்க் சீனியர் செகணட்ரி பள்ளி, நாராயாணி வித்யாஷரம் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் கல்லூரி, விவிஎன்கேஎம் மேல்நிலைப்பள்ளி, வித்யாலட்சுமி பள்ளி என 9 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் தேர்வர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். பிற்பகல் 1.30 மணிக்குள் மாணவர்கள் மையத்துக்குள் வர வேண்டும். அதன்பின்னர் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. மாணவ-மாணவிகள் முழு பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வுக்கான நுழைவு சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும். முக்கிய பகுதிகளில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அனுமதி அட்டை (அட்மிட் கார்டு) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் செல்லுபடியாகும் அசல் அடையாளச் சான்று மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் (பொருத்தினால்) மற்றும் டிரான்ஸ்பரண்ட் தண்ணீர்பாட்டில் எடுத்து செல்லலாம். செல்போன், ப்ளூ டூத், இயர்போன்கள், மைக்ரோபோன்கள் போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு சாதனமும், ஆபரணங்கள், கைக்கடிகாரம், வளையல், கேமரா போன்றவை மற்றும் எழுதுபொருட்கள் தகவல் எலக்ட்ரானிக் சாதனம், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட், தொப்பி போன்ற பிற பொருட்கள், எந்த உணவுபொருளும் திறக்கப்பட்டது அல்லது பேக் செய்யப்பட்டது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் 1 உதவி ஆய்வாளர் மற்றும் 2 ஆண் காவலர்கள், 2 பெண் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்த வேண்டும். வினாத்தாள்கள் வைக்கப்பட்ட இடத்திலிருந்து தேர்வு கூடங்களுக்கு வினாத்தாள்களை எடுத்து செல்ல ஒரு தேர்வு கூடத்திற்கு ஒரு ஆயுதம் ஏந்திய காவலர் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு தேர்வு கூடத்திற்கும் ஒரு தீயணைப்பு அலுவலர் தீயணைப்பானுடன் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

தொடர்ந்து சுகாதார துறையின் சார்பில் ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள், அவசர தேவைக்காக ஒரு மருத்துவ வாகனம் ஆம்புலன்ஸ், தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் பணியில் இருப்பார்கள். காட்பாடி ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காட்பாடி மற்றும் குடியாத்தத்திலிருந்து தேர்வு கூடங்களுக்கு காலை 11 மணிக்குள் மாணவர்கள் செல்ல தேவையான பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேர்வு கூடங்களில் போதுமான அளவு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தேர்வுக் கூடங்களில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள் எழுதுகின்றனர் அனைத்து ஏற்பாடுகள் தயார் வேலூர் மாவட்டத்தில் இன்று appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,India ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...