×

பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவியின் ஆடைகளை அவிழ்க்க முயன்ற பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

விழுப்புரம் ஆனாங்கூரை சேர்ந்த 21 வயது கல்லூரியில் எம்ஏ இறுதியாண்டு படிக்கும் மாணவி, கடந்த மாதம் 24ம் தேதி தனது வீட்டு மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் இடுப்பில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் வலி சரியாகாததால் விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள ரங்கநாதன் வீதியில் பிரபல தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரது உடலை பரிசோதித்த எலும்புமுறிவு மருத்துவர், ஒருவாரம் பிசியோதெரபி சிகிச்சை பெற வேண்டும், அப்போதுதான் வலி சரியாகும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 3 நாட்களாக கல்லூரி மாணவி, மருத்துவமனையில் உள்ள பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் சந்தோஷ்குமார் (38) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்கு வந்தபோது நீண்ட நேரம் காக்க வைத்த டாக்டர் சந்தோஷ்குமார், பின்னர் பாலியல் நோக்கத்தோடு கையால் முதுகில் தடவி தொந்தரவு செய்துள்ளார். இதனால் அலறியடித்து கொண்ட எழுந்த அந்த மாணவி சந்தோஷ்குமாரை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு உறவினர்களும் அங்கு ஓடிவந்து பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாக்டர் சந்தோஷ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கல்லூரி மாணவி, மேற்கு காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு புகார் அளித்தார். அதில், முதல்நாள் சிகிச்சைக்கு வந்தபோதே என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். எல்லோருக்கும் மிஷின் மூலம் சிகிச்சை அளிக்கும்போது எனக்கு மட்டும் கையால் தொட்டு சிகிச்சை அளித்தார். இதை நான் எச்சரித்தபோதும் சம்பவத்தன்று என் ஆடைகளை அவிழ்க்க முயன்றார். சிகிச்சைக்கு ஆடைகளை அவிழ்க்க வேண்டிய அவசியம் என்ன. முழுக்க முழுக்க தவறாக எண்ணத்துடன் என்னை தொட்டுள்ளார். கூச்சலிட்டபோது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன?. இதனால் அவரை தற்காப்புக்கு தாக்கிவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தேன். என்னைபோல் இதற்குமுன் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். இனிமேலும் ஒருவர்கூட பாதிக்கப்படக்கூடாது. எனவே காவல்துறை அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

டாக்டர் சந்தோஷ்குமார் தரப்பில் கூறும்போது, ‘பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை என்பது அப்படிதான் இருக்கும். இதனை மாணவி தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், பாலியல் ரீதியான எண்ணத்தில் தொடவில்லை’ என்று போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் டாக்டர் சந்தோஷ்குமார் மீது பாலியல் தொந்தரவு, பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.

The post பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Anangur, Villupuram ,
× RELATED விழுப்புரம் ரயில் நிலையத்தில்...