×

செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர், தன்னை பின்னால் இருந்து கட்டிப்பிடித்ததாகவும், அவரை தள்ளிவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நிலையில், இது குறித்த விசாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில ராஜ்பவனில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் ஆளுநர் ஆனந்த போஸ் மீது கொல்கத்தா காவல் நிலையத்தில் வெள்ளியன்று பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்தார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அந்த பெண் கூறுகையில்,
முதல் முறையாக கடந்த மாதம் 24ம் தேதி எனது சுயவிவரத்துடன் ஆளுநரின் சேம்பருக்கு அழைக்கப்பட்டேன். உதவியாளர் ஆளுநருக்கு எதிராக இருந்த நாற்காலியில் என்னை அமரும்படி கூறினார். உதவியாளர் சென்ற பின்னர் ஆளுநர் தனது அருகில் இருந்த நாற்காலியில் என்னை அமரவைத்தார். எனது சம்பளம் மற்றும் கல்வி தகுதி குறித்து கேட்டறிந்தார். அவருக்கு நிறைய பல்கலைக்கழகங்களுடன் தொடர்புள்ளதால் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறினார். ஆனால் நான் வேலையில் நம்பிக்கை இல்லை என்று கூறினேன். திருமணம் ஆகிவிட்டதா என கேட்டார். பின்னர் என்னிடம் கை குலுக்குவதற்காக கையை நீட்டினார்.

நான் அவருக்கு கைகளை கூப்பி நமஸ்காரம் கூறிவிட்டு, அவரது கால்களில் விழுந்து வணங்கினேன். பின்னர் அவர் எனது சுயவிவரத்தின் பின்புறத்தில் எனது செல்போன் எண்ணை எழுதும்படி கூறினார். நான் அதனை எழுதிக்கொண்டிருந்தபோது அவர் என்னை பின்னால் இருந்து பிடித்தார். நான் அவரை தள்ளிவிட்டு அறையில் இருந்து வௌியே வந்துவிட்டேன். இது குறித்து யாரிடமும் கூறவேண்டாம் என கேட்டுக்கொண்டதால் வெளியே சொல்லவில்லை. புகார் கொடுக்கவும் எனக்கு தைரியமும் இல்லை.

மே 2ம் தேதி மீண்டும் சேம்பருக்கு அழைக்கப்பட்டேன். அப்போது எனக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக ஆளுநர் கூறினார். நான் அதனை மறுத்தபோது, உனக்கு என்ன பிரச்னை என்று கேட்டார். நான் இது குறித்து உன்னிடம் தனியாக ஆலோசிக்கிறேன் என்றார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க ஆளுநர் விஷயத்தில் மோடி வாய்மூடி இருப்பது ஏன்?
முதல்வர் மம்தா பானர்ஜி, “ சந்தேஷ்காலி சம்பவம் பாஜ முன்கூட்டியே திரைக்கதை எழுதி தயாரித்த பொய்யான படம் என்று நான் முன்பிருந்தே சொல்லி வருகிறேன். சந்தேஷ்காலி கதையை அரங்கேற்றிய பாஜ, பிரதமர் மோடி ஆளுநர் ஆனந்த போஸ் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

The post செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : governor ,West Bengal ,KOLKATA ,VICTIM ,WEST ,Rajbhavan, West Bengal ,Dinakaran ,
× RELATED ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி