×

ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான கர்ப்பிணி உடல் தகனம்

சென்னை: உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்ணின் உடல் திரிசூலத்தில் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், மேலநீலித நல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (25). இவருக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த கஸ்தூரி (20)யுடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிகள் இருவரும் சென்னை, பல்லாவரம் அடுத்த திரிசூலம், பெரியார் நகர் வேம்புலியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியானதால் அவருக்கு வளைகாப்பு நடத்த கடந்த வியாழக்கிழமை மாலை தம்பதியர், உறவினர்களுடன் சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசிக்கு புறப்பட்டனர். ரயில் உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் சென்றபோது, திடீரென கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால், கழிவறைக்கு சுரேஷூடன் சென்றார். கழிவறை பூட்டி இருக்கவே, எஸ்.9 கோச் வாசல் படியில் அமர்ந்து வெளியில் வாந்தி எடுத்துள்ளார்.

பின்னர் இருக்கைக்கு செல்ல எழுந்தபோது திடீரென்று நிலை தடுமாறி ஓடும் ரயிலில் இருந்து கஸ்தூரி, கணவன் கண்ணெதிரிலேயே கீழே விழுந்தார். இதனால், பதறிய சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் தங்கள் கோச்சிலிருந்த அபாயச் சங்கிலியை பிடித்து இழுக்க முற்பட்டபோது, அது செயல்படவில்லை. இதனால் எஸ்.10 கோச்சுக்கு சென்று அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
தகவலறிந்து ரயில்வே போலீசார் வந்து, தலை, கை, கால்களில் பலத்த காயங்களுடன் கிடந்த கஸ்தூரியை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கஸ்தூரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, உடலில் இருந்து சிசு தனியாக பிரிக்கப்பட்டது. 2 உடல்களும் சுரேஷ் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து 2 உடல்களும் திரிசூலம், பெரியார் நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவர்களது குடும்ப வழக்கப்படி இரு உடல்களும் அருகில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் திரிசூலம் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான கர்ப்பிணி உடல் தகனம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ulundurpet ,Suresh ,Melenilitha ,Nallur ,Shankarankovil Circle, Tenkasi District ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை