×

‘‘மச்சாவதாரப் பெருமாளுக்கு இருமுடி கட்டி வரும் மீனவர்கள்’’

மத்ஸய ஜெயந்தி: 5.5.2024

‘தசாவதாரம்’ என்பது மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை ‘அவதாரம்’ என்று இந்துக்கள் குறிப்பிடுகின்றனர். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான மகாவிஷ்ணு, உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களைக் காக்கவும். தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக நம்புகிறார்கள்.

மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன்மையான அவதாரமாகும். கோ முகன் என்னும் அசுரன் பிரம்மனிடமிருந்து ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களைத் திருடி, மீன் வடிவில் ஆழ்கடலுக்கு அடியில் சென்று ஒளித்து வைத்துக் கொண்டான்.

அசுரனைக் கண்டுபிடிக்க திருமால் மச்சவடிவில் அவதாரம் செய்து ஆழ்கடலுக்கடியில் இருந்த அசுரனை வதம் செய்து நான்கு வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார் என்று மச்சபுராணம் கூறுகிறது. நான்கு வேதங்களையும் மீட்டு வந்த மகாவிஷ்ணு அவற்றை பிரம்மாவுக்கு ஆந்திர மாநிலம் நாகலாபுரம் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் கொடுத்ததன் காரணமாக இங்கு அருளின் பெருமாளின் திருநாமம் ‘வேத நாராயணப் பெருமாள்’ என்றாயிற்று. மச்ச அவதாரம் மகா விஷ்ணுவின் முதல் அவதாரமாகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழில் மீன் என்ற பொருள் தரும். இந்த முதல் அவதாரத்தில் மகாவிஷ்ணு நான்கு திருக்கரங்களுடன் உடலின் மேல் பாகம் தேவ ரூபமாகவும், கீழ் பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்கிறது மச்சபுராணம். இதில் மகாவிஷ்ணுவின் முதல் அவதாரம் நிகழ்ந்த இடம் நாகலாபுரம் ஆகும். தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டைக்கு மிக அருகில் நாகலாபுரம் உள்ளது. சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

ஆதியில் இந்த ஊரை அரிகண்ட பெருமாள் நாயக்கர் என்பவர் ஆட்சி புரிந்து வந்ததால் ‘அரிகண்டபுரம்’ என்றழைக்கப்பட்டு வந்தது. பின்னர் விஜயநகரப் பேரரசர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து நிறைய திருப்பணிகள் செய்து முடித்ததும். அந்த ஊருக்கு தனது தாயாரின் பெயரான நாகம்மாள் என்ற பெயரை சூட்டினார். அந்தப் பெயர் கால ஓட்டத்தில் மருவி நாகலாபுரம் என்று மாறிவிட்டது.

நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் அனைத்து வித ஆகமங்களையும் உள்ளடக்கிக் கட்டப்பட்ட அழகான ஆலயம். இப்படிக் கட்டப்பட்ட ஒரே ஆலயம் இதுதான் என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக இந்த ஆலயத்தில் சைவ, வைணவ, சக்தி கடவுள்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. சிவன், விஷ்ணு ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான தலமாகவும் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு மூல முதல் கடவுளான விநாயகர் சிலைகள் உள்ளன. துவார பாலகராகவும், கோஷ்ட மூர்த்தியாகவும் விநாயகர் சிலைகளைக் காணலாம். மூலவராகப் பெருமாள் உள்ளார் தாயார் சந்நதியும் இடம் பெற்றுள்ளது.

ஒருபுறம் வீணா தட்சிணாமூர்த்தியும், மற்றொரு புறத்தில் ராமர், ஹக்ரீவர், அனுமன், நரசிம்மர் என பல தெய்வங்களும் வரிசையாக உள்ளனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு தெய்வமும் அவரவர் திசைக்கு ஏற்ப பிரதிஷ்டை செய்யப்
பட்டுள்ளனர். மூலவர் வேத நாராயண சுவாமி மேற்கு திசை நோக்கி நின்று அருள்கிறார். அவரை எதிர் நோக்கிய படி தாயார் சந்நதி கிழக்கு நோக்கியுள்ளது. மூலவரின் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அபய, வரத ஹஸ்தத்துடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் அவரவருக்குரிய அமைப்புடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பெருமாள் வீற்றிருக்கும் வைகுண்டம் ஏழு வாசல்கள் கொண்டது. அதை ‘சப்த துவாரம்’ என்கின்றனர். ஒவ்வொரு வாயிலாக கடந்து சென்று பெருமாளை தரிசித்தால் வைகுண்டம் சென்றது போன்ற பலனை பெற முடியும் என்பது ஐதீகம். இந்த தலம் பஞ்ச பிராகாரங்கள் கொண்டது. அதாவது ஐந்து பிராகாரங்கள் உள்ளன. கருவறையை சுற்றி முதல் பிராகாரம் அகழியுடன் உள்ளது.

மற்றொரு வித்தியாசமான அமைப்பும் இங்கே உள்ளது. மண்டபத்தைச் சுற்றிலும் நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. இதை எட்டு துவார பாலகர்கள் காவல் புரிகிறார்கள். முதல் வாயிலில் நாகராஜ கணேசன், விஷ்ணு துர்க்கை, இரண்டாம் வாயிலில், ஜெய, விஜயன்; மூன்றாவது வாயிலில் விக்னசா, தாபசா; நான்காவது வாயிலில் மனிகா, சந்தியா என்போராவர். வித்தியாசமான இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை. அதிசயமாக கருவறையை சுற்றி மிகப் பெரிய அகழி அமைந்துள்ளனர். அந்த அகழிப் பகுதியிலும் ஏராளமான அரிய சிற்பங்கள் உள்ளன. 15,16 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் அனைத்து அம்சங்களையும், உள்ளடக்கி, ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட அழகான ஆலயமாகும். அழகான ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. கருவறையில் வேத நாராயண சுவாமி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

வழக்கமாக பெருமாளின் பாதம் அவருக்குரிய பீடத்தில் அமைந்திருக்கும். ஆனால், இந்த தலத்தில் வேதங்களை மீட்க பெருமாள் மீன் அவதாரம் எடுத்தவர் என்பதால். அதை பிரதிபலிக்கும் வகையில் வேத நாராயண சுவாமியின் கால் பகுதி மீன் போன்ற அமைப்பில் காணப்படுகிறது அவருக்கு இரு புறமும் தேவியும் பூதேவியும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர். கருவறை முன்மண்டபத்தில் ஆழ்வார் சிலைகளும் உற்சவர் சிலைகளும் காணப்படுகின்றன.
இங்குள்ள ஒவ்வொரு தூணிலும் சிற்பக் கலையம்சம் நிரம்பி வழிகிறது. பிராகாரத்தில் விஷ்ணு, துர்க்கை, பிரம்மா, விஷ்வக்ஸேனர் ஆகியோரைக் காணலாம். கருவறையின் பின்புறம் லட்சுமிவராக சுவாமி, வேணு கோபாலர், லட்சுமி நாராயணர், ஹயக்ரீவர் உள்ளனர்.

அருகில் பூவராகர் உள்ளார். இரண்டவது பிராகாரம் அகன்ற பிரமாண்டமானது. இங்கு வேதவல்லித் தாயார், ராமர், லட்சுமணர், அனுமன் ஆகியோர் உள்ளனர். மூன்றாவது பிராகாரம் அழகிய நந்தவனம் கொண்டது. நான்காவது பிராகாரம் மாடவீதியாகவும், ஐந்தாவது பிராகாரம் கிராமத்தை உள்ளடக்கியதாகவும் உள்ளது. ஆகம விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் நவகிரகங்களுக்குரிய அனைத்து அம்சங்களும் உள்ளன. இதனால் நவகிரகங்களில் யார் எந்த கிரமத்தில் தோஷம் இருந்தாலும் இங்கு வந்து முறையாக வழிபாடு செய்தால் உரிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இங்கே இன்னொரு விசேஷமும் உண்டு. பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து அசுரனிடமிருந்து வேதங்களை மீட்டு வந்தார் அல்லவா? அப்போது அவர் அசுரனை வதம் செய்ய தனது சக்கராயுதத்தை பிரயோகம் செய்தார். அப்படியே அந்த சக்கரத்தை வீசும் நிலையிலேயே கருவறையில் வேத நாராயண சுவாமியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்படி சுவாமியின் வலது கரம் சக்கர பிரயோகம் செய்யும் கோலத்தில் காட்சியளிப்பதால், அர்ச்சகர்கள் சுவாமியின், வலது பக்கம் நிற்பதோ, அர்ச்சனை செய்வதோ இல்லை எல்லாம் சுவாமியின் இடது பக்கம் மட்டுமே நடைபெறுகிறது. திருமலை-திருப்பதி ஆலயத்தின் நேரடி கட்டுப்பாட்டில் நாகலாபுரம் வேத நாராயண சுவாமி ஆலயம் இயங்கி வருகிறது. அதனால், திருப்பதி ஆலயத்தில் நடப்பது போன்றே இந்தத் தலத்திலும் அனைத்து வகை பூஜைகளும் பெருமாளுக்கு நடத்தப்படுகின்றன. இங்கும் திருப்பதியைப் போன்றே தினமும் கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இங்கு ஆலயம் முழுவதும் ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அத்தனையும் தமிழ்க் கல்வெட்டுகளே!

மீன ராசியின் ராசியாதிபதி குரு பகவான். மீன லக்னத்தில் பிறந்தவர்களும் லக்னாதிபதி குருபகவான். பத்தாம் அதிபதியாக இருப்பது மிகவும் சிறப்பாகும். பத்தாம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம் செல்வாக்கு, கௌரவம், பதவி என்று பல யோகங்கள் உண்டாகும் மீன ராசி மற்றும் லக்னம் குருவின் ஆதிக்கம் பெற்ற ராசியாகும். அத்தகைய மீன ராசியில் சந்திரன் உத்திரட்டாதி, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் தினமே மச்சாவதார மூர்த்தியின் ‘மத்ஸ்ய ஜெயந்தியாகும்’. வைகுண்ட ஏகாதசி, தை மாத பிறப்பு, ஏகாதசி, யுகாதி- ஆகிய விழாக்கள் முக்கியமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்படும் விழாக்களாகும்.
ஆந்திராவில் பல்வேறு ஆலயங்களில் இருமுடிகட்டி யாத்திரை செல்லும் பழக்கம் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் விநாயகப் பெருமானுக்கு பக்தர்கள் இருமுடிகட்டி வருகிறார். ஆந்திராவில் உள்ள பல சிவசக்தி ஆலயங்களுக்கும் இருமுடிகட்டி செல்கிறார்கள்.

இதே போன்று ஆந்திராவில் வாழும் மீனவர்கள் மச்சாவதாரப் பெருமாளான வேத நாராயண சுவாமிக்கு இருமுடிகட்டி வருகிறார்கள். இருமுடி என்றதும் நமக்கு சபரிமலை அய்யப்பன் ஆலயத்துக்கச் செல்லும் பக்தர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி செல்லும் அந்த யாத்திரை மிக வித்தியாசமானது.

அதேபோன்று ஆந்திராவில் உள்ள நாகலாபுரம் வேத நாராயண சுவாமி ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள். இதில் பெரும்பாலோர் 90% மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லூர், ஓங்கோல் காவாலி, துர்க்கைப்பட்டினம் ஆகிய நகரங்களில் வாழும் மீனவர்கள் ஆண்டுதோறும் இந்த தலத்துக்கு இருமுடிகட்டி வருகிறார்கள்.

அதற்கு முன்னதாக இந்த மீனவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் மாலை அணிந்து தீவிரமாக விரதம் இருக்கிறார்கள். அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து கடைப்பிடிக்கும் அத்தனை நெறிமுறைகளையும் இந்த பக்தர்களும் கடைப்பிடிக்கிறார்கள். ஏப்ரல் மாதம் மச்ச ஜெயந்தி தினத்துக்கு முன்பு அவர்கள் தங்கள் ஊர்களில் இருந்து யாத்திரை புறப்படுவார்கள். மிகச் சரியாக மச்ச ஜெயந்தி தினத்துக்கு ஒரு நாளைக்கு முன்பு நாகலாபுரம் வந்து சேர்வார்கள். அவர்கள் தங்கள் இருமுடிகளில் ஹோமத்துக்குத் தேவையான பொருட்களை சுமந்து கொண்டு வந்திருப்பார்கள்.

மச்ச ஜெயந்தி தினத்தன்று அதிகாலையில் நாகலாபுரம் ஆலயத்தில் மிகப் பிரம்மாண்டமான ஹோமம் நடத்தப்படும். அதில் இருமுடி கட்டி வரும் பக்தர்கள் பங்கேற்பார்கள். தாங்கள் கொண்டு வந்த ஹோமப் பொருட்களை பயபக்தியுடன் ஹோமத்தில் சமர்ப்பிப்பார்கள். பிறகு ஆலயத்தில் வழிபாடு செய்து தங்களது இருமுடி யாத்திரையை நிறைவு செய்வார்கள். இப்படி இருமுடி சுமந்து வந்து வழிபடுவதன் மூலம் தங்களுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது நிறைய மீன்கள் கிடைக்க மச்ச அவதாரம் எடுத்த வேத நாராயணப் பெருமாள் அருள்புரிவதாக நட்புகிறார்கள். அதுமட்டுமின்றி கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது உரிய பாதுகாப்பு கிடைப்பதற்கும் மச்ச அவதாரப் பெருமாள் துணை இருப்பதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்தும் இந்த ஆலயத்துக்கு இருமுடி கட்டிச் செல்லும் பக்தர்கள் இருக்கிறார்கள். சித்தூர், பொன்னேரி, ஊத்துக் கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமானோர் இருமுடிகட்டி ‘மச்ச ஜெயந்தி’யன்று ஆலயத்துக்குச் சென்று வழிபடுகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்துக்கு இருமுடிகட்டி வரும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. நாகலாபுரம் வேத நாராயண சுவாமி ஆலயத்தில் தினமும் மூன்று கால பூஜை நடத்தப்படுகிறது. காலை 8.30 மணி, பகல் 11.00 மணி, மாலை 6.00 மணி வாரத்தில் ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அபிஷேகம் மூலவருக்கு! வேதவல்லித் தாயாருக்கு வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகம்!

திருமாலின் முதல் அவதாரமான மச்சாவிதாரம் பெருமாளை வணங்கினால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post ‘‘மச்சாவதாரப் பெருமாளுக்கு இருமுடி கட்டி வரும் மீனவர்கள்’’ appeared first on Dinakaran.

Tags : Matsaya Jayanti ,Lord ,Vishnu ,Hindus ,earth ,Lord Maha Vishnu ,Supreme God ,Vaishnavaism ,
× RELATED தி.மலை மலையே சிவப்பெருமான் தான், மலையை...