×
Saravana Stores

விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி சாவு வளையல் அணி விழா நடத்த சென்றபோது சோகம்

விருத்தாசலம், மே 4: வளையல் அணி விழா நடத்த சென்றபோது விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(25). இவரது மனைவி கஸ்தூரி(20). இவர்கள் சென்னை திரிசூலம் பெரியார் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 11 மாதம் ஆன நிலையில் கஸ்தூரி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு வளையல் அணி விழா நடத்துவதற்கு சொந்த ஊர் செல்ல நேற்று முன்தினம் மாலை சென்னை கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து எஸ் 9 பெட்டியில் உறவினர்கள் 11 பேருடன் புறப்பட்டு சென்றனர்.

மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூரில் புறப்பட்ட ரயில் உளுந்தூர்பேட்டையை கடந்து பு.மாம்பாக்கம் பகுதியில் சென்றது. அப்போது கஸ்தூரிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ரயில் பெட்டியில் இருந்த கழிவறை மற்றும் கை கழுவும் பகுதிகளில் வாந்தி எடுக்க சென்றபோது அந்த அறைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் படியின் ஓரமாக அமர்ந்து வாந்தி எடுத்துள்ளார். அருகில் அவரது கணவர் சுரேஷ் இருந்துள்ளார். வாந்தி எடுத்த பின் உள்ளே வர அங்கிருந்த கைப்பிடியை பிடித்தபோது திடீரென கை நழுவி கால் தடுமாறி படியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன கணவர் சுரேஷ் கத்தி கூச்சல் போட்டதையடுத்து உள்ளே இருந்த உறவினர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்து அலறி அடித்து சத்தம் போட்டனர்.

தொடர்ந்து அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அது வேலை செய்யாததால் அடுத்த 8ம் நம்பர் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதுவும் வேலை செய்யவில்லை. இதனால் தொடர்ந்து அடுத்த பெட்டியான 10ம் நம்பர் பெட்டிக்கு சென்று அதில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து உள்ளனர். அதன் பின்பு பூவனூர் ரயில் நிலையம் அருகே ரயில் நின்றது. பின்னர் கீழே இறங்கி கஸ்தூரியை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஸ்தூரி உயிரிழந்த நிலையில் தலை, கை, கால் என அனைத்து பகுதிகளிலும் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 11 மாதத்தில் ரயிலில் இருந்து விழுந்து பெண் இறந்ததால் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத் பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது கஸ்தூரி குடும்பத்தினர் எப்படி பயணம் செய்தார்கள், ரயிலில் இருந்து விழும்போது யார் யார் இருந்தார்கள். யார் முதலில் பார்த்தது. மற்றவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்களா. தனியாக சென்று வாந்தி எடுத்தாரா, என்று பல கோணத்தில் விசாரணை நடத்திய பின் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்தார்.

அதன்பின்பு விருத்தாசலம் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ரயில் பெட்டியில் பயன்படாத வகையில் இருந்த அபாய சங்கிலி தான் இதற்கு முழு காரணம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விழுந்த உடன் அபாய சங்கிலியை இழுத்த போது ரயில் நின்றிருந்தால் எப்படியும் அவரை மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். 8 கிலோமீட்டர் சென்று ரயில் நின்றதால் சுமார் 4 மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில் கஸ்தூரி இறந்துள்ளார் என உறவினர்கள் கவலை தெரிவித்தனர். அபாய சங்கிலி ரயில் பெட்டியில் வேலை செய்யாததால் இந்த உயிரிழப்புக்கு ரயில்வே துறை நிர்வாகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்துகிறது டிஎஸ்பி பேட்டி
இதுகுறித்து டிஎஸ்பி செந்தில்குமரன் கூறுகையில், கஸ்தூரி, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் தங்களது ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக கொல்லம் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தனர். கஸ்தூரிக்கு வாந்தி வருவதுபோல் இருந்துள்ளது. அப்போது கதவின் அருகில் சென்று வாந்தி எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் வாந்தி வரவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் கதவின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது தவறி கீழே விழுந்துவிட்டார். அதன் பிறகு ரயில்வே காவல் நிலையத்திற்கு தெரிந்து போலீசார் அங்கு சென்று கஸ்தூரியை கண்டுபிடித்தனர். பின்பு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தபோது டாக்டர்கள் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரயில் பயணத்தில் பாதுகாப்போடு பயணம் செய்ய வேண்டும். செல்பி எடுக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான எந்தவித குற்ற செயலும் நடக்கக் கூடாது. பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்று பல விதங்களில் நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் இந்த விபத்தின்போது கணவர் கூடவே இருந்தும் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இது சம்பந்தமாக ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பின்பு தெரியும், என்றார்.

ரயில்வே நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உறவினர்கள் கதறல்
இதுகுறித்து கஸ்தூரியின் உறவினர் வசந்தா என்பவர் கூறும்போது, அபாய சங்கிலியை இழுத்து எவ்வளவோ முயற்சித்தோம். அபாய சங்கிலி வேலை செய்யவில்லை. தொடர்ந்து 2 பெட்டிகளை கடந்து 3வது பெட்டியில் தான் வேலை செய்தது. அபாய சங்கிலியை இழுத்தபோது ரயில் நின்றிருந்தால் கண்டிப்பாக எங்கள் பிள்ளையை நாங்கள் காப்பாற்றி இருப்போம் என கதறி அழுதபடி தெரிவித்தார். அதுபோல் கஸ்தூரியின் சித்தப்பா கூறியபோது, 10 கிலோமீட்டர் கடந்து வந்து ரயில் நின்றதால் நாங்கள் பதறி அடித்துக் கொண்டு அந்த இரவு நேரத்தில் ரயில்வே பாதையில் ஜல்லிகளில் நடந்து செல்லும்போது எங்களது உயிரே போய்விட்டது. அப்படி இருந்தும் வலியை பொறுத்துக்கொண்டு இருட்டில் ஓடி சுமார் 4 மணி நேரம் தேடி எங்கள் பிள்ளையை கண்டுபிடித்தோம்.

பிள்ளை கீழே விழுந்தவுடன் ரயில் நின்றிருந்தால் கண்டிப்பாக மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம் என தெரிவித்தார். கஸ்தூரியின் சித்தி கூறும்போது, எங்கள் பிள்ளைக்கு வளையல் காப்பு என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு அழைத்து வந்தோம். இப்போது பிள்ளையையும், குழந்தையையும் பிணமாக ஊருக்கு எடுத்து செல்கிறோம். இதுபோன்று உயிர்களுடன் விளையாடும் இந்த ரயில்வே நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் இதுபோன்று எந்த உயிரும் போகக்கூடாது. பெயரளவுக்கு வைத்திருக்கும் அபாய சங்கிலிகளை சோதனை செய்து அதனை செயல்முறைக்கு மாற்ற வேண்டும், என்றார்.

The post விருத்தாசலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி சாவு வளையல் அணி விழா நடத்த சென்றபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Vriddhachalam ,Suresh ,Melaneelithanallur ,Shankarankovil circle ,Tenkasi district ,Dinakaran ,
× RELATED அஞ்சுகிராம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் கைது