×

துஷாரா, பும்ரா அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது. சால்ட், நரைன் இணைந்து கேகேஆர் இன்னிங்சை தொடங்கினர். சால்ட் 5 ரன், ரகுவன்ஷி 13, கேப்டன் ஷ்ரேயாஸ் 6 ரன் எடுத்து நுவன் துஷாரா வேகத்தில் அடுத்தடுத்து வெளியேற, கொல்கத்தா 3 ஓவரில் 28 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. நரைன் 8 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

ரிங்கு சிங் 9 ரன் எடுத்து சாவ்லா சுழலில் அவரிடமே பிடிபட, நைட் ரைடர்ஸ் 6.1 ஓவரில் 57 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து பரிதவித்தது. இந்த நிலையில், வெங்கடேஷ் – மணிஷ் பாண்டே இணைந்து போராடினர். வெங்கடேஷ் 36 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தனர். மணிஷ் 42 ரன் (31 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்திக் வேகத்தில் மாற்று வீரர் பிரெவிஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரஸ்ஸல் 7 ரன் எடுத்து ரன் அவுட்டாக, ரமன்தீப் (2), ஸ்டார்க் (0) இருவரும் பும்ரா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

உறுதியுடன் விளையாடிய வெங்கடேஷ் 70 ரன் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பும்ரா பந்துவீச்சில் வெளியேற, கொல்கத்தா 19.5 ஓவரில் 169 ரன் குவித்து ஆல் அவுட்டானது. வைபவ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பந்துவீச்சில் பும்ரா 3.5 ஓவரில் 18 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். துஷாரா 3, ஹர்திக் 2, சாவ்லா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன் எடுத்து, 24 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சூர்யகுமார் அதிகபட்சமாக 56 ரன் ( 35 பந்து,6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். டிம் டேவிட் 24 ரன் எடுத்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ஸ்டாக் 4 விக்கெட்டுகளையும் சக்ரவர்த்தி, நரேன், ரஸ்ல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நைட் ரைடர்ஸ் 10 போட்டியில் 7வது வெற்றியை பதிவு செய்து 2வது இடத்தில் நீடிக்கிறது.

The post துஷாரா, பும்ரா அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா appeared first on Dinakaran.

Tags : Dushara ,Bumrah ,Kolkata ,Mumbai ,IPL league ,Mumbai Indians ,Kolkata Knight Riders ,Whangade Stadium ,KKR ,Salt ,Narine ,Tushara ,Dinakaran ,
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்