×

ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை

சென்னை: ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தென்காசி அருகே உள்ள மேல்நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில் கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். கொல்லம் விரைவு ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று கதவு ஓரத்தில் வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் நிலை தடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். கஸ்தூரி ரயிலில் இருந்து விழுந்ததைக் கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக அபாய சங்கிலியை இழுக்க முயன்றுள்ளனர். ஆனால், அது வேலை செய்யாத தால் பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் அவரது உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி கஸ்தூரியை தேடினர்.

ஆனால் அதற்குள் ரயில் சில கி.மீ தொலைவு கடந்துவிட்டதால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அங்கிருந்து ரயில் விருத்தாசலம் சென்றது. பின்னர் கஸ்தூரியின் உறவினர்கள் போலீசாரிடம் கஸ்தூரியை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர். பின்னர் போலீசார் விரைந்து சென்று அவர் விழுந்த பகுதியில் தேடி சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பிறகு அவரது உடலை மீட்டனர். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த கஸ்தூரி உயிரிழந்த நிலையில் கிடந்தார். தொடர்ந்து, அவரது உடலை விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்று சென்றனர். உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரிக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை வளைகாப்பு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்துள்ளனர்.

கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காகவும், வளைகாப்பு நிகழ்வை முன்னிட்டும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் இந்த கோர விபத்து நடைபெற்று, கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.கர்ப்பிணி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோட்டாட்சியருக்கு ரயில்வே காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. ரயிலில் இருந்து விழுந்த கர்ப்பிணியை மீட்க அபாய சங்கிலிகளை இழுத்தபோது வேலை செய்யவில்லை என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Kotastir ,CHENNAI ,GOTTASHIR ,Suresh Kumar ,Nallur ,Tenkasi ,Musk ,Railway Police ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...