சென்னை: தமிழ்நாட்டில் தற்போது 4,820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மது வாங்குவோரிடம் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெற்று செல்கின்றனர். நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலை மாவட்டங்களில் முதலிலும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, கோவை, பெரம்பலூர், தர்மபுரி, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சென்னை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்த அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் 12 மாவட்டங்களிலிருந்து இதுவரை ரூ.306 கோடியே 32 லட்சத்து 25,330 வசூலிக்கப்பட்டுள்ளது. பாட்டில்களை திரும்ப தந்தவர்களுக்கு ரூ.297 கோடியே 97 லட்சத்து 61,280 திரும்ப தரப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை திரும்பத்தராமல் இருப்பதன் மூலம் உபரியாக உள்ள ரூ.9 கோடியே 19 லட்சத்து 64,050 தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 மாவட்டங்களில் இந்த திட்டம் புதிதாக செயல்படுத்தப்பட்டு ரூ.56 கோடியே 45 லட்சத்து 41,260 வசூலிக்கப்பட்டு காலி பாட்டில்களை திரும்ப தந்தவர்களுக்கு ரூ.54 கோடியே 64 லட்சத்து 88,870 திரும்ப தரப்பட்டுள்ளது. மீதி தொகை ரூ.2 கோடியே 19 லட்சத்து 47,350 தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.12 கோடியே 62 லட்சம் தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் திரும்ப தரப்பட்ட தொகை தொடர்பாக ஆய்வு செய்து உரிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை ஜூன் 7க்கு தள்ளிவைத்தனர்.
The post காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் 12 மாவட்டங்களில் இருந்து ரூ.306 கோடி வசூலிப்பு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.