×

கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பு மோதல், கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு; வாகனங்கள் சூறை, போலீஸ் தடியடி : 19 பேர் கைது – மறியல்

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி வட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும். நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் அப்பகுதியில் வசித்து வரும் ஒரு சமுதாய மக்கள் பங்கேற்பதற்காக வந்தனர். அதற்கு அங்கிருந்த இதர சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழா பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்த பிரச்னை தொடர்பாக நேற்று காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த அதிகாரிகள், கோயிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் வரக்கூடாது என தடை விதிக்க முடியாது. அனைவரும் சென்று வழிபடும் வகையில்தான் அரசு வழி வகுத்துள்ளது என்றனர். இதுதொடர்பாக ஊரில் கலந்து பேசி நாளை (இன்று) முடிவு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அவரவர் ஊர் திரும்பியதும், இருதரப்பினரும் தங்களை தாக்கிவிட்டனர் என்று ஒருவர் மாற்றி ஒருவர் புகார் தெரிவித்தனர்.  இதையடுத்து, சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட ஒரு தரப்பினர் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென சாலை மறியலில் குதித்தனர். தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. திடீரென சிலர் அங்கிருந்த கடைகளுக்கு தீ வைத்தனர். இதில், ஒரு வணிக வளாகத்தின் அருகில் உள்ள பழக்கடை மற்றும் நகை அடகு கடை மற்றும் காலியான கடைகள் உள்பட 5 கடைகள் தீக்கிரையாகின. இதையடுத்து, அங்கிருந்த கடைகளை அடைத்து விட்டு வியாபாரிகள் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது, சிலர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில், ஒரு ஆட்டோ உள்பட 10 வாகனங்கள் சேதமடைந்தன. இதையடுத்து, மாலை 4.15 மணியளவில் தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் இருதரப்பிலும் 19 பேரை போலீசார் கைது செய்தனர். பதற்றம் நிலவுதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பு மோதல், கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு; வாகனங்கள் சூறை, போலீஸ் தடியடி : 19 பேர் கைது – மறியல் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Mariamman ,Hindu Religious Charities Department ,Divattipatti ,Kadaiyambatti circle ,Salem ,Chitra ,Sami ,
× RELATED அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் மூன்றாம்...