×

நீர் கசிவை தடுக்கும் வகையில் பூண்டி ஏரிக்கு ரூ2 கோடியில் புதிய மதகு : விரைவில் பணிகள் தொடக்கம்

திருவள்ளூர்: நீர் கசிவை தடுக்கும் வகையில், பூண்டி ஏரிக்கு ரூ2 கோடியில் புதிய மதகு அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது, என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3631 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். கொசஸ்தலை ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கத்தில் உபரி நீரை வெளியேற்றும் வகையில் 800 அடி ஆழத்தில் 50 அடி உயரத்தில் 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரியில் அமைந்துள்ள 2 மற்றும் 9ம் மணல் வாரி கதவணைகள் மட்டும் 2 அடி மட்டத்திற்கும் 2 அடி ஆழம் வரையிலும் இருப்பதால் ஏரி தொடங்கியதிலிருந்து இதுவரை சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இதனால் அடிமட்டம் வரை இருக்கும் இரும்பு கதவணை செயல்படாமல் இறுகி துருப்பிடித்து சேதமடைந்தது. இதனால் அதிக அளவில் நீர் கசிந்து வெளியேறி வந்த நிலையில் அவ்வப்போது கதவணைகள் அருகே மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக நீர்க்கசிவு அடைக்கப்பட்டு வந்தது. இதனால் இப்பணிகளை நிரந்தரமாக மேற்கொள்ள அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், புதிய மதகுகளை பொருத்த கடந்த 2021ம் ஆண்டு ரூ2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியது. இந்த நிலையில் ஆந்திர அரசுக்கு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணா நதி திறந்து விடப்பட்டதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து இந்த மதகுகள் வழியாக நீர் வீணாக வெளியேறியதால் புதிய மதகுகள் அமைக்காமல் பழைய மதகுகளை சீரமைத்து பலப்படுத்தப்பட்டது. ஆனால் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. தொடர்ந்து கனமழை, வெள்ளம் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் புதிய மதகுகள் பொருத்தும் பணி தாமதமானது.

தற்போது கோடை வெயில் காரணமாக தொடர்ந்து பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் 8 மற்றும் 9 ஆகிய மதுகுகளை அகற்றிவிட்டு புதிய மதகுகள் பொருத்துவது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பூண்டி நீர்த்தேக்கத்தில் 8, 9 ஆகிய மதகுகள் என்பது மணல் வாரி கதவணைகள். இவற்றின் வழியாகத்தான் ஏரியிலிருந்து மணல் கழிவுகளை அகற்ற முடியும். ஆனால் நீர் தேக்கம் தொடங்கியது முதல் இதுவரையில் இந்த மதகுகள் பயன்படுத்தவில்லை. அதனால் துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. ஏற்கனவே புதிய மதகு பொருத்தும் பணிக்கு, ரூ2 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான இரும்பு கதவணைகள், தேவையான வெல்டிங் பொருட்கள், ராட்சத கிரேன் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. தற்போது நீர் இருப்பு குறைந்து வருவதால் புதிய மதகுகள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

The post நீர் கசிவை தடுக்கும் வகையில் பூண்டி ஏரிக்கு ரூ2 கோடியில் புதிய மதகு : விரைவில் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Bundi lake ,Thiruvallur ,Poondi Lake ,Public Works Department ,Chennai ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...