×
Saravana Stores

ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது: காவல் நிலையத்தில் 2 பேர் சரண்; கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா

ஆத்தூர்: ஆத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த 2பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். தலைமறைவாக உள்ள வருவாய் ஆய்வாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரை அடுத்த மேல்தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல் (60). இவரது விவசாய தோட்டத்துக்கு அருகில், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ராஜூ(64) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள மா மரத்தின் காய்ந்த இலைகள், ஜோதிவேல் தோட்டத்தில் விழுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜூ மற்றும் அவரது உறவினர்கள் வினோ , அருள்மணி, வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் வெங்கடேஷ், ராஜி என்ற நடராஜ் ஆகியோர் சேர்ந்து ஜோதிவேலை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், மல்லியகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த ஜோதிவேல், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமானதால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மாலை ஜோதிவேல் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து மல்லியகரை போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அருள்மணியை (30) கைது செய்தனர். மற்ற 3பேரை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜூ என்ற நடராஜ் (70), வினோ (30) ஆகியோர் நேற்றிரவு மல்லியகரை போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆர்ஐ வெங்கடேசை தேடி வருகின்றனர். அவர் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்ற தகவலால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஜோதிவேலின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப் பட்டுள்ளது. இன்று காலை அவரது மனைவி நீலாவதி, மகன் பெருமாள் உள்பட உறவினர்கள் 50க்கும் மேற் பட்டவர்கள் ஜி.ஹெச்.க்கு வந்தனர். இந்த கொலையில் 8 பேருக்கு தொடர்பு உள்ளது. 8 பேரையும் கைது செய்தால் தான் தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்போம் என பெருமாள் கூறினார்.

தொடர்ந்து 50 பேரும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் சென்று மனு அளிக்க அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பெருமாள் தலைமையில் 10 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் பெருமாள் தெரிவித்துள்ளதாவது: தங்கள் விவசாய நிலத்தையொட்டி ராஜூவின் தோட்டத்தில் உள்ள மரத்தின் கிளையின் நிழல் எங்கள் நிலத்தில் உள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த கிளையை அகற்றுமாறு நேற்று முன்தினம் எனது தந்தை கூறியபோது அடித்துக்கொலை செய்து விட்டனர். தட்டிக்கேட்ட தாய் நீலாவதி, சித்தப்பா சாமிதுரையை தாக்கி கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். கொலை தொடர்பாக 4 பேர் மீது மட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 8 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெருமாள் மனுவில் தெரிவித்துள்ளார்.

The post ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது: காவல் நிலையத்தில் 2 பேர் சரண்; கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Atur ,Tarna ,Salem district ,Malyagaray ,Aathur ,Dinakaran ,
× RELATED சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை