×
Saravana Stores

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் மதுபானங்களை அழித்தபோது பயங்கர தீ

திருமலை: கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் மதுபானம் ரோடு ரோலர் கொண்டு அழிக்கப்பட்டது. அப்போது தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மெட்லப்பள்ளியில் உள்ள ஒரு மாந்தோப்பில் அதிகளவு மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த மாந்தோப்பில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெட்டி பெட்டியாக மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மொத்தம் 1,230 பெட்டிகளில் 10 ஆயிரம் லிட்டர் மதுபானம் இருப்பது தெரிய வந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் இவை கோவா மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. இங்கு விரைவில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மதுபானத்தை அதிக விலைக்கு விற்க கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை அழிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று இணை ஆட்சியர் கீதாஞ்சலிசர்மா, எஸ்பி அட்னல்நயீம் ஆஸ்மி ஆகியோர் முன்னிலையில் போலீசார் மதுபான பாட்டில்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து ரோடு ரோலர் ஏற்றி அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். பாட்டில்கள் உடைந்து மதுபானம் சாலையில் ஓடியது. அப்போது திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் மதுபானங்களை அழித்தபோது பயங்கர தீ appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Goa ,Medlapalli, Krishna district, Andhra state ,Andhra ,
× RELATED ஆந்திராவுக்கு இருண்டகாலம்: சொல்கிறார் ஜெகன்மோகன்