×
Saravana Stores

மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு

சென்னை: அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் தற்போது உள்கட்சி பூசல் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் மோதத் தொடங்கியுள்ளார். அதேநேரத்தில் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என்றும் அவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அதில், அதிமுகவும் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தது. ஒவ்வொரு தொகுதியாக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு முன்னரும், வேட்பாளர் அறிவித்த பின்னரும், தேர்தலுக்குப் பின்னரும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை நடத்தினார்.

அதில் திருப்பூர், ஈரோடு தொகுதிகளில் செங்கோட்டையனிடம் ஆலோசனை நடத்தாமல் எடப்பாடி பழனிசாமியே தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துள்ளார். இதனால் செங்கோட்டையன் கடும் அதிருப்தி அடைந்தார். ஏனெனில் ஈரோடு மாவட்டத்துக்குள் சில தொகுதிகள் திருப்பூர் மக்களவைக்குள்ளும் வருகிறது. இதனால் தன்னிடம் வேட்பாளர் குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்துவார் என்று செங்கோட்டையன் எதிர்பார்த்தார். இதனால் வேட்பாளர் அறிவித்த நேரத்தில், திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கோவையில் உள்ள மருத்துவமனையில் செங்கோட்டையன் சேர்ந்து விட்டார். பின்னர் அவரை சமரசப்படுத்தித்தான் தேர்தல் பணிகளை தொடங்க வைத்தனர். திருப்பூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், டாஸ்மாக் பாரில் வேலை செய்தவராம். எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய உறவினராம். இதுவும் செங்கோட்டையனின் அதிருப்திக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் திருப்பூர் தொகுதிக்குள் வரும் பெருந்துறை தொகுதியில் அவர் வேலையே செய்யவில்லையாம். மேலும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் ஜெயக்குமார், செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர். இதனால் அவர் எந்த வேலையும் செய்யவில்லையாம். அதேநேரத்தில் அவரும் தொகுதிக்குள் வரவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பும் இருந்ததாம். இதனால் திருப்பூர் தொகுதிக்காக செங்கோட்டையன் எந்த வேலையும் செய்யவில்லையாம். தன்னுடைய பேரனுக்கும், பொள்ளாச்சி எம்எல்ஏ மகேந்திரன் மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாம். இதற்கான வேலைகளில்தான் தீவிரம் காட்டி வந்தாராம். ஈரோட்டில் உள்ள கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளராக செங்கோட்டையன் உள்ளார்.

பெருந்துறை, பவானி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளராக கருப்பண்ணன் உள்ளார். ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு கே.வி.ராமலிங்கம் மாவட்டச் செயலாளராக உள்ளாராம். அதில், செங்கோட்டையனுக்கும், கருப்பண்ணனுக்கும் தற்போது மோதல் உருவாகியுள்ளதாம். கருப்பண்ணனும், எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்களாம். இதனால் கருப்பண்ணன் பேச்சைக் கேட்டு, செங்கோட்டையனை எடப்பாடி ஓரங்கட்டுவதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அந்தியூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக இ.எம்.ஆர்.ராஜாவை நியமித்தார் எடப்பாடி. தனது அரசியல் எதிரியான ராஜாவை எப்படி எனக்கு கீழ் உள்ள தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்று கோபத்தில் உள்ளாராம். இதனால் ஈரோடு, திருப்பூர் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லையாம்.

இது குறித்து புகார்கள் வந்ததும், திருப்பூர் தொகுதியின் பொறுப்பாளராக வேலுமணியை எடப்பாடி நியமித்தாராம். இதனால் செங்கோட்டையன் கூடுதல் கோபமடைந்துள்ளாராம். எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தங்கமணி, கே.வி.ராமலிங்கம் ஆகியோருடன் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம். இவர்கள் 3 பேருமே தனி அணியாக செயல்படுகிறார்களாம். மேலும், அந்தியூர் தொகுதியில் வேலை செய்யாமல் இருப்பது குறித்து பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி, அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்படுவது என்று முடிவு எடுத்தாராம். தற்போது தேர்தல் முடிந்துள்ளதால், தேர்தல் பொறுப்பாளர்கள் மீது எடப்பாடி கோபமாக உள்ளாராம். அதில் செங்கோட்டையன் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளாராம்.

இது தெரிந்ததும், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர், ஒடிசாவில் நிலக்கரி எடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாராம். அவர், பாஜவுக்கு நெருங்கியவராம். அவர் மூலம், பாஜக மேலிடத்துடன் செங்கோட்டையன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தேர்தல் முடிவுக்குப் பிறகு அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு தற்போது பாஜவில் எழுந்துள்ளது. இதனால் தனக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் இணைய தயார் என்று அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தனது ஆதரவாளர்களுடனும் ரகசியமாக பேசி வருகிறாராம். இதனால் தேர்தல் முடிவு வெளியான பிறகு அதிமுகவில் – குறிப்பாக மேற்கு மண்டலத்தில் பூகம்பம் வெடிக்கும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். தேர்தல் முடிவு வெளியான பிறகு அதிமுகவில் – குறிப்பாக மேற்கு மண்டலத்தில் பூகம்பம் வெடிக்கும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

The post மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு appeared first on Dinakaran.

Tags : West Zone ,AIADMK ,Edappadi ,Sengottaiyan ,BJP ,CHENNAI ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல குழு கூட்டம்