×

பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்


பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அதிமுகவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரவிமனோகரன் தலைமையில் சிலரும், கட்சியின் சீனியர்களும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். பழநியில் பிளக்ஸ் பேனர்களில் நிர்வாகிகளின் போட்டோக்களை புறக்கணிப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் சீனியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காதது என தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கட்சியின் சீனியர்கள் பலமுறை முறையிட்டும் பலனில்லை. மேலும் அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் குறித்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிமுக நிர்வாகிகள் சிலரே பல்வேறு கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். நேற்று முன்தினம் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்காக நத்தம் விஸ்வநாதன் பழநி வந்தார்.

அவரிடம் நகர செயலாளர் முருகானந்தம் தரப்பினர், கட்சியினரே அவதூறு பரப்பியது குறித்து ஆதாரங்களை வழங்கி முறையிட்டனர். அப்போது நகர செயலாளர் முருகானந்தம் தரப்பினரும், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் தரப்பினரும் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையிலேயே நடுரோட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதில் கோபமடைந்த நத்தம் விஸ்வநாதன் அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்து சென்றார். நத்தம் விஸ்வநாதன் முன்னிலையிலேயே கட்சியினர் தாக்கி கொண்ட சம்பவம் பழநியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி பூசல்; அதிமுக மாஜி அமைச்சர் முன்பு நடுரோட்டில் நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Palani ,AIADMK ,Ravimanokaran ,Dindigul ,Dinakaran ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு